தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் இந்தியா என்ற யூ-ட்யூப் சேனலுக்கு ‘கங்குவா’ பட ப்ரோமாஷனுக்காக் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் நடிகர் சூர்யா, தான் மும்பையில் செட்டில் ஆனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது பலரையும் வாவ் சொல்ல வைத்துள்ளது. அப்படி என்ன பேசினார் சூர்யா? பார்க்கலாம்...
நடிகர் சூர்யா, தன் மனைவி ஜோஜிகா, மகன் தேவ் மற்றும் மகள் தியாவோடு சென்னையிலிருந்து மும்பைக்கு 2022 ம் ஆண்டு இறுதியில் குடிபெயர்ந்திருந்தார். இது சூர்யா மீது பலரும் பல்வேறு வகையில் விமர்சனங்களை முன்வைக்க காரணமாக அமைந்தது. சிலர் அரசியலாகவும், சிலர் அவதூறாகவும் அதை விமர்சித்தனர். இந்நிலையில் அத்தகையை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சூர்யா தற்போது பேசியுள்ளார். அது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து, அடடே சொல்ல வைத்துள்ளது.
அதன்படி தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் இந்தியா என்ற இணையத்தில் பேசியுள்ள நடிகர் சூர்யா, “ஓப்பனாகவே விஷயங்களை சொல்ல நினைக்கிறேன். 18 - 19 வயதில், ஜோதிகா சென்னைக்கு தன் தொழிலுக்காக குடிபெயர்ந்தார். பின் எங்களுக்கு திருமணம் நடந்தது. பின்னும் அவர் எங்களுக்காக, எங்களோடு சென்னையிலேயே இருந்தார். ஆக தன் வாழ்வின் முதல் 18 வருடங்களே அவர் மும்பையில் இருந்துள்ளார். பின் கிட்டத்தட்ட 27 வருடங்களாக சென்னையில் என்னுடனும், என் குடும்பத்தோடும்தான் அவர் அதிகம் இருந்துள்ளார். தன் குடும்பம், வாழ்வியல், உறவினர்கள், நண்பர்கள் என எல்லாவற்றையுமே எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார் ஜோ.
தற்போது தன் பெற்றோருடன்... 27 வருடங்கள் கழித்து... ஒன்றாக நேரம் செலவிடுவதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு ஆணுக்கு என்ன தேவையோ, அதுவே ஒரு பெண்ணுக்கும் தேவை என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். நான் இந்த விஷயத்தில் தாமதமாகவே அனைத்தையும் அறிந்துள்ளேன் என நினைக்கிறேன்.
ஜோதிகாவிற்கு, விடுமுறை கொண்டாட்டம், நண்பர்கள் வட்டம், பொருளாதார சுதந்திரம் எல்லாமே தேவைப்பட்டுள்ளது. சரியாக சொன்னால் அவருக்கு மரியாதை, ஜிம் செல்ல நேரம், தனிமையான நேரம் என எல்லாமே தேவைப்பட்டுள்ளது. அதனால்தான் சொல்கிறேன்... ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் வாழ்க்கையில் தேவைப்படுகிறதோ, எதற்காகவெல்லாம் அவன் ஓடுகிறோனோ... அதெல்லாம் ஒரு பெண்ணுக்கும் தேவைப்படுகிறது. இதை உணர வேண்டும்.
அப்படியிருக்கையில், நாம் ஏன் ஒரு பெண்ணிடம் இருந்து, அவர் பெற்றோருடனான நேரத்தை அபகரிக்க வேண்டும்? ஒரு பெண்ணின் வாழ்வியலை நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்த அணுகுமுறையை எப்போது நாம் மாற்றிக் கொள்ள போகிறோம்? ஏன் எப்போதும் ஒரு ஆண் எடுப்பவனாகவே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள்தான், மும்பைக்கு எங்களை நகர வைத்தது.
இப்போது சக நடிகராக ஜோவின் வளர்ச்சி எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் குழந்தைகளும் மும்பையில் படிக்க பழகிக்கொண்டார்கள். அங்கேயும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இது எல்லாத்தையும் போலவே, ஜோவுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு மும்பையும் பெரும் உதவியாக இருந்தது. 2டி நிறுவனம் நாங்கள் தொடங்கியதற்கு காரணமே, இங்கே குழந்தைகளுக்கோ பெண்களுக்கோ படம் எடுப்பவர்கள் குறைவு என்பதால்தான். நாமாவது இப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டும் என்பது ஜோவின் கனவாகவும் அது இருந்தது. மும்பை சென்றபின், பல மொழிகளிலும் எங்களால் இதை எளிமையாக சாத்தியப்படுத்த முடிந்தது. இதுபோன்ற அனைத்து காரணங்களாலும்தான், அங்கே செட்டில் ஆனோம்.
என்னை பொறுத்தவரை, நான் சென்னை - மும்பை இரண்டையும் பேலன்ஸ் செய்ய கற்றுக்கொண்டேன். மாதத்தில் 10 நாட்களாவது எனக்கு விடுப்பு உள்ளது. அதாவது, அந்த நாட்களில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லமாட்டேன். வேலை சம்பந்தமாக ஒரு ஃபோன்கூட எடுக்கமாட்டேன். நண்பர்களை மட்டும் சந்திப்பேன். மற்றபடி குழந்தைகளோடு வெளியே செல்வது, ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, மகனோடு பேஸ்கட்பால் விளையாடுவது என்று குடும்பத்தோடு குடும்பத்துக்காக இருப்பேன். அதேநேரம், ஷூட்டிங் நாட்களில் 18 - 20 மணி நேரம் கூட உழைப்பேன்” என்று கூறியுள்ளார்.
சூர்யா ஜோதிகா ஜோடி, திரையை தாண்டியும் இப்படி பல Couple Goals செய்துகொண்டிருப்பது, பல தரப்பிலும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. திருமணத்துக்குப் பின் மனைவியின் தேவை என்ன என்பதை, திருமணமான ஒவ்வொரு கணவனும் அறிய வேண்டும். அதை இன்னொருமுறை அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார் சூர்யா!