ஆளவந்தான் - முத்து - புதுப்பேட்டை வலைதளம்
சினிமா

மீண்டும் திரைக்கு வரும் சூப்பர்ஹிட் படங்கள்... இப்போது வசூலை அள்ளுமா?

தியேட்டர்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும், மக்களை கவரும் வகையிலும் பழைய படங்களை மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்ய ஆர்வம்காட்டி வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்!

Jayashree A

தமிழ் சினிமாவில் மீண்டும் தலைதூக்கும் ‘ரீ-ரிலீஸ்’ கலாசாரம்!

முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை தியேட்டர்களில் சில கால இடைவெளிக்கு பின் மீண்டும் மீண்டும் திரையிட்டு வசூலை தேடிக்கொள்வர். அவ்வாறு திரையிடப்படும் படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவந்தன. ஓடிடி, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவைகளின் வளர்ச்சியினால் ஒருகட்டத்துக்கு மேல் தியேட்டர் வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையே கணிசமாக குறையத் தொடங்கியது.

இதனால் தியேட்டர்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும், மக்களை தியேட்டர் நோக்கி கவரும் வகையிலும் மீண்டும் தியேட்டர்களில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யலாமென முடிவெடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் தங்களின் கவனத்தை ரீ-ரிலீஸ் நோக்கி திருப்பி உள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி ரீ-ரிலீஸ் படங்கள் தியேட்டர்களில் கணிசமான வசூலை கொடுக்கத்தான் செய்கிறது.

அந்தவகையில் சில கிளாசிக் திரைப்படங்களை தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்தி வெளியிட்டு நல்ல வசூலைப் பெற்றார்கள் தயாரிப்பாளர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக சுப்ரமணியபுரம், வேட்டையாடு விளையாடு, கர்ணன் போன்ற சில படங்களை சொல்லலாம். இதன் வரவேற்பை தொடர்ந்து அதே வழியைத் தற்போது சில படங்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

இன்று டிசம்பர் 8 ம் தேதி மட்டும் க்ளாஸிக்கான மூன்று படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று, கமல்ஹாசன் நடித்துத் 2001ம் ஆண்டு வெளிவந்த படமன 'ஆளவந்தான்'.

டெக்னிக்கலாக அப்படம் மிகவும் பேசப்பட்டாலும் அன்று படம் படுதோல்வியை அடைந்தது. 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்திலிருந்து சுமார் 55 நிமிடத்துக்கான காட்சிகளை 'டிரிம்' செய்து நீக்கி விட்டு இப்போது 2 மணி நேரம் 3 நிமிடம் மட்டுட்மே ஓடக் கூடிய படமாக ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.

அடுத்து ரஜினிகாந்த், மீனா நடித்துத் 1995ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'முத்து'. இதையும் இன்று ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்படத்தையும் டிஜிட்டலில் மாற்றி வெளியிடுகின்றனர். இப்படத்தை எந்த விதத்திலும் டிரிம் செய்யவில்லை, அதே இரண்டே முக்கால் மணி நேரப் படமாகவே வெளியிடுகிறார்கள்.

இந்த இரண்டு படங்களுக்கு போட்டியாக இன்று வெளியாகும் மற்றொரு ரீ-ரிலீஸ் படம் 'புதுப்பேட்டை'. செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்துத் 2006ம் ஆண்டு வெளிவந்தது இப்படம். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படம், வியாபார ரீதியாக அப்போது தோல்வியடைந்தது. அப்படத்தை இன்று குறைவான தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். ஒரே நாளில் இப்படி மூன்று முன்னணி நடிகர்கர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது தயாரிப்பாளர்கள் இடையேயும் தியேட்டர் உரிமையாளார்களிடமும் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.