The Legend Of Maula Jatt facebook
சினிமா

பாகிஸ்தானில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்.. இந்தியாவில் வெளியிட தடை! பின்னணி இதுதான்!

மெகா ஹிட் ஆகும் திரைப்படங்களை, வெளிநாடுகளிலும் வெளியிட்டு வசூலை அள்ளுவது திரையுலக வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தானில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படத்தை, இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்:ரவிக்குமார்

மெகா ஹிட் ஆகும் திரைப்படங்களை, வெளிநாடுகளிலும் வெளியிட்டு வசூலை அள்ளுவது திரையுலக வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தானில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படத்தை, இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த தடை? தமிழ்த் திரையுலகை கோலிவுட் என்றும், இந்தி திரையுலகை பாலிவுட் என்றும் அறிந்திருப்போம். 'லாலிவுட்' என்று அழைக்கப்படும் திரையுலகை அறிந்திருக்கிறீர்களா... இப்போது தெரிந்து கொள்ளுங்கள்... பாகிஸ்தானிய திரையுலகைத் தான் 'லாலிவுட்' என்கிறார்கள்.

'லாகூர்' நகரை மையமாகக் கொண்டிருப்பதால், இந்தப் பெயர். உருது - பஞ்சாபி மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கிறார்கள் 'லாலிவுட்' கலைஞர்கள். 'லாலிவுட்' குறித்து இப்போது பேச காரணம் இருக்கிறது.

'பாகிஸ்தானிய பஞ்சாபி' மொழியில் வெளியான 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்' ( 'The Legend Of Maula Jatt') திரைப்படம், 'லாலிவுட்' வரலாற்றிலேயே மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2022 ல் வெளியான இந்தத் திரைப்படம், உலக அளவில், 400 கோடி ரூபாய் வசூலித்து, 'லாலிவுட்' பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றை புரட்டிப் போட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் மட்டும், 115 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. 2018 ல் உருது மொழியில் வெளியான 'Jawani phir nahi ani 2' திரைப்படம், 73 கோடி ரூபாய் வசூலித்தது தான், லாலிவுட்டின் உச்சபட்ச வசூலாக இருந்தது. இத்தனைக்கும், 1979 ல் 'மௌலா ஜாட்' என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக் தான், 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்' திரைப்படம்.

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஏழைத் தொழிலாளியான ஹீரோ, கொடுங்கோலாட்சி செய்யும் ஆட்சியாளரின் அக்கிரமங்களால் வெகுண்டெழுந்து, அநீதிகளை அழித்தொழிப்பது தான் கதை. இந்தக் கதையை நூற்றுக்கணக்கான முறை நாம் பார்த்திருப்போம். ஆனால், பிலால் லஷாரியின் தேர்ந்த இயக்கமும், நசீர் அதீப்பின் விறுவிறுப்பான திரைக்கதையும், ரசிகர்களை திரையிலேயே 'என்கேஜ்' செய்திருக்கிறது.

படம் வெளியாகி 2 ஆண்டுகளாகியும், பாகிஸ்தான் திரையரங்குகளில் வீக் என்ட் நாள்களிலும் 'ஹவுஸ்ஃபுல்' ஆக ஓடிக்கொண்டிருக்கிறது 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்'... 'லாலிவுட்' சூப்பர் ஸ்டாரான 'ஃபவத் கான்' நாயகனாக நடித்துள்ளார். மஹிரா கான் நாயகியாக நடித்துள்ளார். இந்த நட்சத்திரங்கள் 'பாலிவுட்' படங்களிலும் நடித்துள்ளனர். 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்' திரைப்படத்தை, இந்தியாவிலும் வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு.

குறிப்பாக, பஞ்சாபி மொழி என்பதால், பஞ்சாபில் வெளியிட முடிவாகி, அக்டோபர் 2 ஆம் தேதியை நிச்சயிக்கப்பட்டிருந்தது. 'Zee Studios' நிறுவனம் தான் வெளியிட இருந்தது. 2016 ஆம் ஆண்டில் 'உரி' பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் திரைக்கலைஞர்கள் இடம்பெறும் படங்களுக்கு இந்தியா தடை விதித்தது.

போர்க்கொடி உயர்த்தும் அமைப்புகள்

அதற்கு முன்பு, 2011 ல் வெளியான 'BOL' என்ற 'லாலிவுட்' திரைப்படம் தான், இந்தியாவில் வெளியாகியிருந்தது. அதன் பிறகு, இந்தியாவில் வெளியாகும் பாகிஸ்தானிய படம் என்ற பெயரை ஈட்ட இருந்தது 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்'... ஆனால், பாகிஸ்தான் படத்தை வெளியிடக் கூடாதென, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற அரசியல் கட்சியும், வேறு சில அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.

இந்த சூழலில் தான், 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்' திரைப்படத்தை பஞ்சாபில் திரையிட, அனுமதி மறுத்துள்ளது இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை. காலவரையறையையும் தெரிவிக்க மறுத்துள்ளது. பாகிஸ்தான் திரைக் கலைஞர்களின் பங்களிப்பை, 2016 ல் கைவிட்டது பாலிவுட் திரையுலகம்.

ராணுவப் பதற்றங்கள் காரணமாக, 2019 ல் இந்திய திரைப்படங்களை தடை விதித்தது பாகிஸ்தான் அரசு. அண்மைக் காலமாக, இந்தியாவில் வெளியாகும் பஞ்சாபி திரைப்படங்கள் சில, பாகிஸ்தானில் வெளியாகின்றன. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தயாராகும் இணையத் தொடர்கள் இரு நாட்டிலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. இந்தியப் படைப்புகளில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கக் கோரிய மனுவை, இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த அளவுக்கு குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. அப்படியிருந்தும், 'தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்' படத்திற்கு சிவப்புக்கொடி காட்டப்பட்டிருக்கிறது.