சினிமா

‘சூப்பர் டீலக்ஸ்’ - திரைப்பார்வை

‘சூப்பர் டீலக்ஸ்’ - திரைப்பார்வை

webteam

நீங்கள் செய்யும் எதுவும் இன்னொருவர் வாழ்வில் இன்னொருவர் வாழ்வில் சிறிதாகவோ, பெரிதாகவோ மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை யதார்த்தத்தின் ஆதி புள்ளியோடு இணைக்கும் திரைப்படமே ‘சூப்பர் டீலக்ஸ்’.

ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். விபத்தாய் நடந்த மரணத்தால் சிக்கிக் கொண்ட தம்பதி, பிள்ளை பாசத்தோடு தவிக்கும் திருநங்கை, தான் ஒரு பாலியல் திரைப்பட நடிகை என்பது பிள்ளைக்குத் தெரிந்துவிட்ட அயர்ச்சியில் அம்மா, கடவுளை நம்புவதா வேண்டாமா என குழம்பித் தவிக்கும் இறை போதகர், அப்பா திருநங்கை என தெரியாமலிருக்கும் சிறுவன், உடைந்த டிவியை மாற்ற போராடும் சிறுவர்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு உலகத்துக்குள் சஞ்சரிக்கின்றன. அந்த உலகம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக காட்டி, அதன் இயல்பிலேயே இணையவும் வைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் நடிப்பு, காட்சிகளின் நிகழ்விடம் என எந்த இடத்திலும் சறுக்காமல் இருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

சமந்தா தன் முன்னாள் கதாலனோடு பேசும் தொலைபேசி உரையாடலில் இருந்தே தொடங்குகிறது படத்தின் டைட்டில் கார்டு. முதல் காட்சியிலேயே அதிர்ச்சி. அது கணவனுக்கு தெரிய நேர்கையிலும், சிறுவனை மிரட்டும்போதும், கணவன் புலம்பும்போது ஏற்றுக்கொண்டு அலைபாயும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். ஃபஹத் ஃபாசில் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.  

எப்போதோ காணாமல் போல தன் அப்பா மீண்டும் வருகிறார் என தெரிந்ததும் ஆசை ஆசையாய் காத்திருக்கும் சிறுவன் கதாபாத்திரம் அழகியல் நிறைந்த வடிவமைப்பு. விஜய் சேதுபதி திருநங்கை என தெரிந்து குடும்பமும், சமூகமும் புறக்கணிக்கும்போதும் “நீ ஆம்பளையோ, பொம்பளையோ எங்ககூடவே இருப்பா” எனும் காட்சி கவிதை. திருநங்கை ஷில்பாவாக விஜய் சேதுபதி. பூபோட்ட சேலை, கையில் பை, கருப்பு கண்ணாடி என அந்த தோற்றத்தில் கச்சிதமாக ஒட்டிக் கொள்கிறார். ஆனால், உடல்மொழியில் அந்த நளினம் அவ்வளவாக பொருந்தவில்லை. சில காட்சிகள் மட்டுமே என்றாலும், காயத்ரி மனம் பதிகிறார்.

பாலியல் திரைப்பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன். அது தன் மகனுக்கு தெரிந்துவிட்டது தெரிந்து அவனிடம் விளக்குவது, உயிருக்குப் போராடும் அவனை காப்பாற்ற போராடும்போது என நடிப்பில் அவருக்கு முக்கியமான படம். படிக்கட்டில் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் எளிமையில், ராஜமாதாவா இது? ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார். அவர் கணவர் அற்புதம் என்கிற தனசேகரன் பாத்திர வடிவமைப்பும் அழுத்தம். அதில் மிஷ்கின் நடிப்பு கொஞ்சம் மிகையாயினும், அதற்கு அது தேவை என புரிந்துகொள்ள முடிகிறது.

முதல் காட்சியில் இருந்து அந்த நான்கு சிறுவர்களும் கலக்கியிருக்கிறார்கள். அதேபோல், மிஷ்கின் உதவியாளராக வருபவரின் நடிப்பில், குரலும் கச்சிதம். கெட்ட போலீசாக பக்ஸ் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சூப்பர் டீலக்ஸ் பயண அனுபவம் கொடுக்க பெரிதும் மெனக்கெட்டிருப்பது யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை. வித்தியாசமான ஒலிக் குறிப்புகளையும், இசைக் கருவிகளையும் பயன்படுத்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத், நிரவ் ஷா பணியும்.

ஐந்து பிரதான கதாபாத்திரங்கள் அவர்களின் வாழ்க்கை எனச் செல்லும் திரைக்கதையின் நீளம் படம் பார்க்கும் போது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல், ஆபாச வசனங்களும் படத்தின் ஓட்டத்தோடு பயணிக்கையில் தேவையா என தோன்ற வைக்கிறது. அதோடு, சில இடங்களில் ‘சரி இதெல்லாம் எதுக்கு?’ எனும் எண்ணம் வருவதையும் தடுக்க முடிவதில்லை. ஆனால், அதை எல்லாம் தாண்டி மிஷ்கின், நலன்குமாரசாமி, நீலன் கே சேகர், தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவான பாத்திரங்களும், உளவியல் சார்ந்த காட்சியமைப்புகளும் வசனமும் ’சூப்பர்’ என சொல்ல வைக்காவிட்டாலும், ‘சூப்பர் டீலக்ஸ்’ வித்தியாசமான படம் எனும் உணர்வை வரவைக்கிறது.