பெங்களூரில் தடை விதிக்கப்பட்ட சன்னி லியோனின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டமாக ‘சன்னி நைட்’ என்ற பெயரில் வொயிட் ஆர்க்கிட் கன்வென்சன் மையத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்குபெற்று சிறப்பு நடனம் ஆட உள்ளதாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், பெங்களூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், கலாச்சார சீரழிவாக புத்தாண்டு நாளில் நடைபெறும் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி இந்திய நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, புத்தாண்டு இரவில் நடைபெறவிருந்த சன்னி லியோனின் நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு அனுமதி தர மறுத்தது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது உயர்நீதிமன்றத்தில் ‘சன்னி நைட்’ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், சன்னி லியோன் பங்குப்பெற்று நடனம் ஆடும் இந்த நிகழ்ச்சியில் எந்தவித கலாச்சார சீரழிவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், தடையை மீறி இந்த நிகழ்ச்சி நடத்தினால் பெரும் ஆபத்தை சந்திக்கக் நேரிடும் என்று சில கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் நிகழ்ச்சி முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எந்தவித ஆபாச நடனமும் இடம் பெறாது என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த மனு வரும் வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.