வருடத்திற்கு 200 திரைப்படங்கள், சுமார் 1500 கோடி ரூபாய் வியாபாரம் என வளர்சியடைந்த தமிழ் திரையுலகம், கடந்த 2020 - 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருந்தது. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், அதை நம்பி வேலை செய்வோர் என பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததனர். இந்த இரண்டு வருடங்களால் திரை துறை சார்ந்த வியாபாரம் சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த இழப்பிலிருந்து மீள, திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொரோனா முதல் ஊரடங்கு முடிந்தபின் வெளியான விஜயின் மாஸ்டர் திரைப்படம் வசூல்ரீதியாக மாபெரும் வெற்றியடைந்திருந்தது. ஆனால் அதை கொண்டாடி முடிப்பதற்குள் அடுத்தடுத்து இரண்டு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் திரையுலக வர்த்தகம் பெரும் கேள்விக்கு உள்ளானது. இந்த நிலையில் மூன்றாவது ஊரடங்கிற்கு பிறகு வெளியான அஜித்தின் 'வலிமை' வெளியாகி, திரையுலகிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். வலிமை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும் பெரும் வசூலை அது ஈட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வலிமை திரைப்படம் வசூலில் வெற்றியடைந்த நிலையில், தற்போது சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் குடும்ப ரசிகர்களின் வருகை அதிகம் இருக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்கின்றனர். இதை தொடர்ந்து விஜய்யின் ‘பீஸ்ட்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்', கார்த்தியின் 'விருமன்', கமல்ஹாசனின் 'விக்ரம்', விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா', யாஷ் நடித்துள்ள 'கே.ஜி.எஃப்-2', விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என மே மாதம் இறுதி வரை அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாகவுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் கோடை விடுமுறையில் முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் வரிசையாக வெளியானது இல்லை. எனவே, இந்த ஆண்டு நிச்சயம் திரைத்துறைக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த பின்னடைவில் இருந்து தமிழ் திரையுலகம் சற்று மீள தொடங்கியுள்ளது. இந்த முறை கொரோனா பொதுமுடக்கம் எதுவும் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
- செந்தில்ராஜா
இதையும் படிங்க... 'எதற்கும் துணிந்தவன்' விமர்சனம்: மகளிர் தினத்தன்றுதானே வெளியிட்டிருக்க வேண்டும் சூர்யா!?