சினிமா

அமைச்சகம் தலையிடுவதா? சர்வதேசப் பட விழா நடுவர் ராஜினாமா!

அமைச்சகம் தலையிடுவதா? சர்வதேசப் பட விழா நடுவர் ராஜினாமா!

webteam

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI)  தலைமை ஜூரி, இயக்குனர் சுஜாய் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும், ஆண்டு இறுதியில் கோவாவில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வரும் 20-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் நடக்கும் இந்த விழாவில் திரையிடப்படும் படங்களைத் தேர்வு செய்ய, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக இயக்குனர் சுஜாய் கோஷ் நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்தக் குழு சிறந்த இந்திய படங்களைத் தேர்வு செய்து, செப்டம்பர் மாதம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. அதில் ’எஸ்.துர்கா’ என்ற மலையாள படமும், ’நியூடு’ என்ற மராத்தி படமும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அமைச்சகம் இந்த இரண்டு படங்களையும் நீக்கிவிட்டு மற்றப் படங்களை திரையிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதை ஏற்காத தலைமை ஜூரி, இயக்குனர் சுஜாய் கோஷ், தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதுபற்றி கோஷ் கூறும்போது, ‘ராஜினாமா செய்தது உண்மைதான். வேறு காரணம் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை’ என்றார். இதே போல மற்ற ஜூரிகளும் அமைச்சகத்தின் முடிவுக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.