சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் சிம்பு தனது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து அவரது திரை வாழ்க்கை வேகம் எடுத்துள்ளது என்றே கூறலாம். அவரது நடிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் சில சமரச முயற்சிகள் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிம்பு ஆகிய இருவருக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இந்நிலையில் ‘மாநாடு’ படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த விவரங்களை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முதற்கட்ட படப்பிடிப்பு குறைந்தபட்சம் இரு மாதங்கள் நடைபெற உள்ளது. ஆகவே படத்தின் 90 சதவீத வேலைகள் இந்தக் காலகட்டத்திற்குள்ளாகவே முடிவடைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘மாநாடு’ படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இதில் இயக்குநர் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா என மூன்று பெரிய இயக்குநர்களும் நடிக்க உள்ளனர். அண்ணன் படம் என்பதால் வழக்கம் போல் பிரேம்ஜியும் இதில் நடிக்கின்றார். இது அரசியல் கலந்த த்ரிலர் படமாக உருவாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். முதன்முறையாக சிம்புவுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தின் மூலம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.