‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, இயக்குநர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது.
பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது.
இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது படத்தின் பிரம்மாண்டமும், கதைக்களமும், சி.ஜி. எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுமே. இதையடுத்து உலகளவில் தவிர்க்கமுடியாத இயக்குநராக ராஜமௌலி உருவாகியிருக்கிறார். மேலும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ராஜமௌலியின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. அவருடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற பிரபல இயக்குநர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த விருது ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. மேலும் ரோலிங் ஸ்டோன் மாத இதழின் 2022-ம் ஆண்டு சிறந்த 22 படங்களில் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 12-வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். உள்பட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.