பிரபல போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறி மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்டினிடம் காவல்துறை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி விரிவாக அறியலாம்...
சமீபத்தில் வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் நன்கு பரிட்சய முகமாக மாறியவர் ஸ்ரீநாத் பாசி. தமிழுக்குதான் இவர் புதிதே தவிர மலையாளத்தில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர்களுள் ஒருவர். மலையாளத்தில் கப்பேலா, கும்பலாங்கி நைட்ஸ், ஹோம் போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவரை போலதான், தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர், பிரயாகா மார்ட்டீன். இவரும் மலையாளத்தில் முக்கியமான சில படங்களில் நடித்து அங்கு பெயர் பெற்றவர்.
கேரளாவில், பிரபல போதைப்பொருள் தாதாவான ஓம் பிரகாஷ், கடந்த 6 ஆம் தேதி கொச்சியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் அறையிலிருந்து கொக்கைன் வகை போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பகுதியில் சோதனையிட்ட போது, அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் ஓம் பிரகாஷின் அறைக்கு நடிகர் ஸ்ரீநாத் பாசியும், நடிகை பிரயாகா மார்ட்டினும் சென்று வந்ததாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு ஏதேனும் இருக்கிறதா என்கிற அடிப்படையில், காவல்துறை இருவரையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீநாத் பாசியிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்ரீநாத் பாசி சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி கைதாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில், மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில், உண்மை என்னவென்று விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
இதில் தற்போது (12 மணியளவில்) ஸ்ரீநாத் பாசி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருக்கிறார். நடிகை பிரயாகா மார்ட்டின் தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என மலையாள ஊடகங்களில் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது.
இருப்பினும் அவரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய ஓம் பிரகாஷ், “நான் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடவில்லை. அதேநேரம் எனக்கு ஸ்ரீநாத்தை நன்கு தெரியும். அவர் என் நண்பர். பிரயாகாவை தெரியாது” என்று மலையாள ஊடகமொன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.