சினிமா

மதுரை ஸ்லாங்க்.. சூர்யாவுடனான கெமிஸ்ட்ரி.. சூரரைப் போற்று குறித்து பேசிய அபர்ணா..!

மதுரை ஸ்லாங்க்.. சூர்யாவுடனான கெமிஸ்ட்ரி.. சூரரைப் போற்று குறித்து பேசிய அபர்ணா..!

webteam

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'சூரரை போற்று' திரைப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோ மாராவின் மனைவி பொம்மியாக அபர்ணா நடிக்கிறார். அது மட்டுமல்லாமல், அவர் மதுரை பேச்சுவழக்கிலும் பேசி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தி நியூஸ் மினிட் பத்திரிகை அபர்ணா பாலமுரளியிடம் ஒரு நேர்காணலை நடத்தியது. அதில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் பதில்களும் வருமாறு:

இந்த படம் கேப்டன் கோபிநாத் பற்றிய உண்மை கதை. உங்களுடைய பொம்மி கதாப்பாத்திரம் பற்றி கூறுங்கள்?

எனது கதாபாத்திரம் அவரது மனைவியை(பார்கவி கோபிநாத்) மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, மேலும் அவரது கனவை நனவாக்குவதில் அவரது பங்கு என்ன என்பது குறித்து இருக்கும். இது ஒரு சிறிய பகுதி அல்ல, அவர் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஏர் டெக்கான் அமைப்பதில் அவருக்கு நிறைய பங்களிப்பு உண்டு.

நீங்கள் பார்கவியை சந்தித்துள்ளீர்களா?

 இல்லை. நான் அவரை சந்திக்கவில்லை. அவர்களின் உடல் மொழியை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இந்த படத்தில் இல்லை.  குணாதிசயங்களையும் அவர்கள் எவ்வாறு தங்கள் இலக்கை அடைந்தார்கள் என்ற கதையையும் மட்டுமே எடுத்துள்ளோம். இது அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர்களின் கதையைப் பற்றியது.

இந்த பாத்திரத்தை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?

சர்வம் தாள மயம் திரைப்படத்தின்போது சுதா மேம் ஜிவி பிரகாஷின் நல்ல நண்பர் என்பதை அறிந்தேன். அவர் மூலமாக பழக்கமானோம். நான் சுதாவிற்கு மெசேஜ் செய்யும்போது என்னுடைய புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு சென்னையில் ஆடிஷனில் கலந்து கொண்டேன். என்னுடைய பாஷையால் முதல் ஆடிஷனில் நான் சரியாக செய்யவில்லை. பின்னர், என்னுடைய நடிப்பை வீடியோ எடுத்து அனுப்பினேன்.

 சுதா கொங்கரா மிகவும் விவரம் சார்ந்த இயக்குனர் என்றும் அவர் நிறைய திட்டமிடுகிறார் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் அனுபவம் என்ன?

ஆம், அவர் அப்படித்தான். அவர் ஒருபோதும் சமரசம் செய்யவோ அல்லது எதையும் கைவிடவோ மாட்டார். அவர் விரும்புவதைப் பெற அவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வார். அதற்கு என்னுடைய கதாப்பாத்திரமே சிறந்த எடுத்துக்காட்டு. நான் அந்த கதாப்பாத்திரத்தை செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால் அவர் எனக்கு நிறைய ஹோம்வொர்க் கொடுத்தார். கதாபாத்திரத்தை என்னால் முடிந்தவரை சிறந்ததாக மாற்றும் பொறுப்பு எனக்கும் இருந்தது. அவரது பெண் கதாபாத்திரங்கள் கீழ் மட்டத்தில் வைக்கப்படக்கூடாது என்பதில் இயக்குநர் சுதா மிகவும் குறிக்கோளாக இருந்தார். அது படத்தில் நன்றாக பிரதிபலித்தது என்று நினைக்கிறேன்.

இந்த படத்தில் மதுரை வழக்கு நீங்கள் பேசுகிறீர்கள். அதை கையாள்வது சிரமமாக இருந்ததா?

இது மிகவும் கடினமாக இருந்தது. மதுரை பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழ் சொற்களுக்கும், எனக்குத் தெரிந்த மற்ற தமிழுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. பலர் எனக்கு பயிற்சி அளித்தனர். டப்பிங் செய்யும் போதுகூட, நான் பேச்சுவழக்கை சரியாகப் பேசுகிறனா என்பதை உறுதிசெய்ய இரண்டு பேர் என் அருகில் அமர்ந்திருந்தனர்.

டப்பிங் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பல கதாநாயகிகள் உள்ளனர். நீங்கள் ஏன் அதை செய்ய விரும்பவில்லை?

 டப்பிங் கலைஞரைப் பயன்படுத்த நான் ஒருபோதும் முடிவு செய்யவில்லை. இயக்குநர் சொன்னால் நான் அதை செய்வேன். நானே டப்பிங் செய்ய வேண்டும் என சுதா மேம் கேட்டுக்கொண்டார். நாங்கள் அதை நோக்கி உழைத்தோம்.

நாங்கள் இதுவரை பார்த்த ப்ரோமோக்களில் சூர்யாவுடன் ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரியை பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் இருவரும் அதை எவ்வாறு செய்தீர்கள்?

 நாங்கள் அதைச் செய்யும்போது அது பெரிய விஷயமாக உணரவில்லை. இது உண்மையில் மிகவும் எளிமையானது. அது நன்றாக வெளிவந்துள்ளது. பாதி நாம் என்ன செய்கிறோம், மற்ற பாதி கடவுள் செய்கிறார். எங்களுக்கு ஒரு அவுட்லைன் வழங்கப்பட்டது. அதனுடன் நாங்கள் பணியாற்றுவோம். முதல் அட்டவணை முடிந்ததும் முழு செட்டும் கெமிஷ்ட்ரி குறித்து மகிழ்ச்சியாக இருந்தது. சூர்யா ஒரு ரொமேண்டிக் ஹீரோ என அறியப்படுகிறார். ஆனால் இந்த அளவிலான கெமிஸ்ட்ரி அனைவருக்கும் எளிதாக அமையாது என்று மேம் கூறினார். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சூர்யா மிகவும் கூல் நபர். 

நீங்கள் ஒரு நடிகரான பிறகு வாழ்க்கை நிறைய மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. நான் கல்லூரியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. எனது பேட்ச்சுடன் என்னால் படிப்பை முடிக்க முடியவில்லை. நான் இந்த விஷயங்களை நிறைய இழந்துவிட்டேன்.

படம் திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா?

நிச்சயமாக. அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும், கொண்டாட்டங்கள் வேறு லெவலில் இருந்திருக்கும். பெரிய திரையில் மற்றவர்களுடன் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். ஆனால், என்னால் மேலும் காத்திருக்க முடியவில்லை. ஆகவே படம் கடைசியாக வெளிவருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளீர்கள். தொழில்களில் கலாச்சாரம் வேறுபட்டதா?

மலையாளத் துறையில் அனைவரையும் எனக்குத் தெரியும். அவர்கள் பழக்கமான முகங்கள். அவர்களுடன் ஒன்றிணைவது எளிது. அதனால் நான் மிகவும் வசதியாக உணர்கிறேன். தமிழைப் பொருத்தவரை, எனக்கு ஒரு வெளிநாட்டவரின் பார்வை இருக்கிறது. ஆனால் 2D இன் செட்களில் நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

ஒரு படத்தில் நீங்கள் தனி கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தால், நீங்கள் எந்த வகையைத் தேர்ந்தெடுப்பீர்கள், ஏன்?

பயோபிக்கில் நடிக்க ஆசை. கீர்த்தி சுரேஷின் மகாநதியை பார்த்து நான் ஈர்க்கப்பட்டேன். அவர் அந்த கதாபாத்திரத்தை வேறு லெவலில் செய்திருப்பார். மற்றும் மிக இளம் நடிகை அவர். எனவே அது ஒரு உத்வேகம்.