சினிமா

தோல்விகளை துவம்சமாக்கி வெற்றிகண்ட மம்மூட்டி என்னும் மகா நடிகன்! - பிறந்தநாள் பகிர்வு

தோல்விகளை துவம்சமாக்கி வெற்றிகண்ட மம்மூட்டி என்னும் மகா நடிகன்! - பிறந்தநாள் பகிர்வு

kaleelrahman

மம்மூட்டி... இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மலையாள சினிமாவின் பேரழகன். இந்தியாவின் மற்ற சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் மற்ற மொழிகளில் நிறைய படங்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இதில் மம்மூட்டி விதிவிலக்கு. சில வாரங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் மம்மூட்டி திரைப்படத் துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்தார்.

கேரளாவின் சந்திரூரில் 1951இல் பிறந்த முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டி இந்த 50 ஆண்டுகால சாதனைக்கு கொடுத்த விலைகள் ஏராளம். கோட்டயத்தில் உள்ள செம்பு கிராமத்தில் வளர்ந்த மம்மூட்டியின் குடும்பம் கொஞ்சம் பெரியது. ஆனந்தம் படத்தில் வருவது போல நிஜ வாழ்க்கையில் அவரது வீட்டில் மம்மூட்டி தான் மூத்தவர். அவருக்கு அடுத்ததாக இரண்டு தம்பிகள் மற்றும் மூன்று தங்கைகள். இளங்கலைச் சட்டம் முடித்தவர் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பயிற்சி செய்துள்ளார். வழக்கறிஞர் படிப்பு படிக்கும்போதே நடிப்பின் மீது நாட்டம் வர 1971-ல் அனுபவங்கள் பாலிச்சகள் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக களம் கண்டார்.

அப்போது மலையாள சினிமாவை ஆண்டுகொண்டிருந்த பிரேம் நசீர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன். இதில் ஒரு சிறிய கதாபாத்திரமே மம்மூட்டிக்கு கிடைத்தது. கண் சிமிட்டும் நேரத்தில் அந்த கேரக்டர் முடிந்துவிடும். என்றாலும் சிறுவயதில் நாடங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே சினிமா கனவுகண்ட மம்மூட்டிக்கு அந்த ரோல் என்ட்ரியை ஏற்படுத்தியது. இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மலையாள சினிமாவில் கவனிக்கப்படும் அளவுக்கு உயர மம்மூட்டி மற்றொரு தசாப்தம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆரம்பகாலத்தில் கே.ஜி.ஜார்ஜின் தலைசிறந்த படைப்பான `யவனிகா'வில் ஜேக்கப் எராலி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரமே மம்மூட்டி ஒரு பிரேக் கொடுத்தது எனலாம். இது நடந்தது 1980 முற்பகுதியில். சிறுவேடங்களில் நடித்துவந்தாலும் அப்போதே மம்மூட்டி பிஸியான நடிகர். அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 1980 காலகட்டம் மலையாள சினிமாவுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. இப்போது எப்படி எழுத்தாளர்களால் மலையாள சினிமா தனித்துவமானதாக தோன்றுகிறதோ, அதற்கு விதைபோட்ட காலகட்டம் அது.

அந்த நேரத்தில் தான் இலக்கியத்தில் முத்திரை பதித்த எழுத்தாளர்கள் மலையாள சினிமாவை மாற்றிக்கொண்டிருந்தனர். எம்.டி.வாசுதேவ நாயர், பத்மராஜன், கே.ஜி ஜார்ஜ் இதில் முக்கியமானவர்கள். அவர்களால் கொண்டுவரப்பட்டவர் மம்மூட்டி. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் எழுத்துக்கு சரியாக பொருந்தியவர் மம்மூட்டி எனலாம். டி தாமோதரன் மற்றும் எம்டி வாசுதேவன் நாயர் ஆகியோரால் எழுதப்பட்ட மறைந்த ஐவி சசியின் திரைப்படங்கள்தான் மம்மூட்டியை ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.

1983ல் மம்மூட்டியும் இயக்குனர் ஜோஷியுடன் இணைந்து ஆராத்திரி படத்தில் நடித்தார். இதன்பின் தொடர்ந்து நியூ டெல்லி, நிராகூடு, ஷ்யாமா, நாயர் சாப், நம்பர்.20 மெட்ராஸ் மெயில், குட்டேட்டன் போன்ற பல படங்களில் ஜோஷியுடன் இணைந்து பயணித்து வந்தார் மம்மூட்டி. இந்தக் கூட்டணி பல மெகா ஹிட்களை கொடுத்தது. இந்த சமயத்தில் தான் மலையாள சினிமாவின் நவீனத்தை புகுத்திய அடூர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து அனந்தரம் படத்துக்காக மம்மூட்டிக்கு அழைப்பு வருகிறது. ஆனால், இதில் நாயகன் மம்மூட்டி கிடையாது. ஹீரோவாக உயர்ந்து, நியூ டெல்லி என்ற பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுத்திருந்த மம்மூட்டி தான் ஹீரோ கிடையாது என்பது தெரிந்தும் நடித்துகொடுத்தார்.

பின்னர் மதிலுகள் படத்தில் அவரை கதாநாயகனாக ஆக்கினார் அடூர். இதே ஆண்டில் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய `ஒரு வடக்கன் வீரகதா' என்ற படமும் மம்மூட்டிக்கு கிடைத்தது. மம்மூட்டி தனது வாழ்நாளில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம்வருவதற்கு அடித்தளம் மீட்டது இந்தப் படம். இதில், நடித்த சந்து என்கிற கேரக்டர் அவரை மலையாள நாட்டின் மூலைமுடுக்கு வரை கொண்டு சென்றது. இன்றளவும் மம்மூட்டியை பற்றி பேசும் மலையாளிகள், அவரின் சந்து கேரக்டரை மறக்காமல் பேசுவார்கள். அந்த அளவுக்கு அவருக்கு அந்த படம் ரீச் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றுகொடுத்தது.

அடூரும் மம்மூட்டியும் இணைந்த மூன்றாவது படமான வித்யன், சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்று கொடுத்தது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் போது, பிஜி விஸ்வம்பரன், ஜே சசிகுமார், பத்மராஜன், லோஹிதாஸ், பரதன், கேஜி ஜார்ஜ், சிபி மலையில், ஷாஜி என் கருண், லோகிதாஸ் மற்றும் ஷ்யாமபிரசாத் மற்றும் பலரின் தொடர்ச்சியான படங்களில் பணியாற்றினார் மம்மூட்டி. 1982 துவங்கி 1987 வரை சுமார் 150 படங்களில் நடித்திருந்தார். இந்த 150ல் சில பிளாக்பஸ்டர் ஹிட்கள் இருந்தாலும் தோல்வி படங்களே அதிகம். அதிலும் குறிப்பாக, 1986 வருடத்தில் சுமார் 35 படங்களில் நடித்தார்.

அனைத்தும் மோசமாக தோல்வியடைந்தன. மம்மூட்டியின் ஹீரோ வாழ்க்கை இனி அவ்வளவுதான் எழுதிவிட்டார்கள். ஒருகட்டத்தில் மம்மூட்டி படங்கள் என்றால், இளைஞர்கள் தியேட்டருக்கு செல்ல ஆர்வமில்லாமல் இருந்தனர். ஆனால் அடுத்த வருடமே தான் யாரென நிரூபித்தார். 1987ல் வெளியான நியூ டெல்லி கமர்ஷியல் ரீதியாக மம்மூட்டியை தூக்கி நிறுத்திய திரைப்படம். கிட்டத்தட்ட மறுபிரவேசம் எடுத்தது போல் உணர்வு. இந்த வெற்றிக்கு பின் தோல்வியை தன் பக்கம் அண்டவிடவில்லை. விரைவாகவே, தன் பன்மொழி பேசும் திறனால் மற்ற மொழிகளிலும் தடம் பதித்தார். இந்தியில் அம்பேத்கர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு இந்திய அளவில் புகழ் சேர்த்தது.

அதேநேரம் தமிழில் நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது தமிழ் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்கும். அழகன், தளபதி, ஆனந்தம், மெளனம் சம்மதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படங்கள் அதற்கு சாட்சி. தளபதி படத்தில் மம்மூட்டி நடித்த தேவா கதாபாத்திரம் பல தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்.

மம்மூட்டி இவ்வளவு பெரிய உயரத்துக்கு எட்டியதற்கு அவரின் பிரமாதமான நடிப்பு மிகப்பெரிய காரணம். உதாரணத்துக்கு 'ஒரு வடக்கன் வீரகதா' படம். இதன் கிளைமேக்ஸ் காட்சியில் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்பட்டதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துச் சொல்லும் ஒற்றை காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். தமிழில் மம்மூட்டியை இளைஞர்களிடம் கொண்டுச் சேர்த்த தளபதி படத்தில், ரஜினி தன்னுடைய சொந்த தம்பி விசயத்தை மறைத்து சூர்யா 'நீ என் நண்பன் ' எனச் சொல்லும்போது போது மம்மூட்டி அழுதுகொண்டே கட்டிப்பிடிக்கும் அந்தக் காட்சிக்காவே தமிழ் ரசிகர்களால் எப்போதும் நினைவுகொள்ளப்படுவார்.

மம்மூட்டியை இத்தனை தசாப்தங்களாக நிலைநிறுத்துவது எந்த பாத்திரத்தினாலும் நடிக்கும் திறமை. ஆறு மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், இதுவரை ஏற்காத பாத்திரங்களே இல்லை எனலாம். ஆரம்ப கால கட்டங்களில் அவர் செய்த கேரக்டர்கள், நடிப்பில் புதிய உச்சத்தை தொட வைத்தது. மூன்று தேசிய விருது, பல முறை மாநில அரசு விருது, சினிமாவில் 50 ஆண்டுகளை தொட்டுவிட்டபோதும், அதே பழைய உதேவகத்தில் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக `உண்டா', `ஒன்', `தி பிரிஸ்ட்' போன்ற படங்கள் மூலமாக வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறார் மம்மூட்டி.

செப்டம்பர் 7 இன்று, அவருக்கு 70 வது பிறந்தநாள். இன்றும் 20 வயது இளைஞராக அதே இளமையுடன், துடிப்புடன் ரசிகர்களை வசப்படுத்திக்கொண்டே மம்மூட்டி என்னும் மகா நடிகன்!

- மலையரசு