சினிமா

பாரதிராஜாவின் கோரிக்கை சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் சினிமா பிரபலங்கள்

பாரதிராஜாவின் கோரிக்கை சாத்தியமா? என்ன சொல்கிறார்கள் சினிமா பிரபலங்கள்

webteam

கொரோனா பாதிப்பு காரணமாக பல தொழில் துறைகள் நஷ்டத்தை சந்தித்ததுபோலவே சினிமா துறையும் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, படப்பிடிப்பு முடியாமல் பாதியில் நின்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர் எனத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த நான்கு மாதங்களாக கூறி வருகின்றனர்.

இந்த நஷ்டத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலக தயாரிப்பாளர்களும் சந்தித்துள்ளனர். இதனால் தெலுங்கு, மலையாள சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுடைய சம்பளத்தை 30 முதல் 50 சதவீதம் வரை குறைத்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நஷ்டம் குறித்து, கோலிவுட் சினிமா துறையில் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இங்குள்ள முன்னணி நடிகர்கள் சம்பள குறைப்பு பற்றி வாய் திறக்கவில்லை. அவர்களின் மெளனத்தால் தயாரிப்பாளர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான இயக்குநர் பாரதிராஜா, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுடைய சம்பளத்தை 30 சதவீதம் வரை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணியில் உள்ள அத்தனை நடிகர்களும் பல கோடி ரூபாயை சம்பளமாக பெறுகின்றனர். பாரதிராஜாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் 30 கோடி ரூபாயும், 10 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் 3 கோடி ரூபாயும் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும். நடிகர்களை போலவே தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் பாரதிராஜா. அதேசமயம் தற்போது படப்பிடிப்பு முடியாமல், ரிலீஸாகாமல் உள்ள படத்தில் பணி புரிந்தவர்களுக்கே இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.அவரின் கோரிக்கை ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சிவாமனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கூறுகையில், “சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என பாரதிராஜா சொல்வது நல்ல விஷயம்தான். ஊர் கூடிதான் தேரை இழுக்க முடியும். இது சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், அதற்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று சொல்லமுடியாது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தால் மட்டுமே சினிமா தொழில் மீண்டும் நல்ல நிலைமைக்கு வரும். அதுவரை அனைவரும் சேர்ந்து சினிமாவையும் கலைஞர்களையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை 600028, கடவுள் இருக்கான் குமாரு, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறுகையில், “இயக்குநர் பாரதி ராஜா கூறுவதை நான் வரவேற்கிறேன். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஏற்கெனவே படத்தை கடன் வாங்கி தயாரித்திருப்பார்கள். அந்த படங்கள் கொரோனா பொதுமுடக்கத்தால் நின்று போயிருக்கும். அந்த படத்திற்காக வாங்கிய கடனுக்கு தயாரிப்பாளர்கள் தற்போது வரை வட்டி கட்டி வருவார்கள்.

எனவே நின்றுபோன படத்தில் பணியாற்றிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தமது சம்பளத்தை குறைத்துக் கொள்ளுவதில் தவறில்லை. நான் பணியாற்றிய படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவே முடிவு செய்துள்ளேன். நாம் இவ்வாறு செய்வது, நமது துறையைச் சேர்ந்தவர்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.