சினிமா

'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..!

'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..!

Rasus

மீடூ புகார் மூலம் உலகிற்கு எதனை நிரூபிக்க முயல்கிறார்கள் என பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மீடூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த மீடூ புகாரால் இந்த விவகாரம் தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்திலும் பல மீடூ புகார்கள் எழுந்தன. இதற்கிடையே மீடூ புகார்கள் சரியானவையா? அல்லது காலதாமதாமனவையா? என்ற விவாவதங்கள் எழுந்தன.

இதனிடையே மீடூ இயக்கத்திற்குப் பிறகு, பணியிடங்களில் பெண்களிடம் 80 சதவிகித ஆண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்தது. வெலாசிட்டி எம்ஆர் என்ற ஆய்வு நிறுவனம், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்களிடம் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மீடூ புகார் மூலம் உலகிற்கு எதனை நிரூபிக்க முயல்கிறார்கள் என பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய சௌகார் ஜானகி, “ கீழ்த்தரமான விளம்பரத்திற்கு என்றோ நடந்தது.. நடக்காதது.. நடந்திருக்க வேண்டியது.. இதையெல்லாம்  இப்போது வெளிச்சொல்வது தேவையா..? உண்மையில் மீடூ விவகாரம் யாரை புண்படுத்துகிறது..? சொல்பவர்களின் குழந்தை, குடும்பத்தை தான் புண்படுத்துகிறது. இலை மறை காயாய் இருந்தால் தான் வாழ்க்கை.. இது மூலமாக அவர்கள் எதனை நிரூபிக்க பார்க்கிறார்கள். நான் எப்போதும் பெண்களுக்காக நிற்கிறவள். பெண்ணியவாதி. ஆனால் இந்த விவகாரத்தில் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

சொல்லக் கூடாத விஷயம் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கலாம். அதற்காக அதனை மூடி மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அதனை விளம்பரப்படுத்த வேண்டாம். பெரிய அரசியல்வாதிகளையோ, பிரபலமானவர்களையோ சர்ச்சையில் சிக்க வைப்பதால் மட்டும் பெரிய ஆளாக ஆகிவிட முடியாது. அதுதான் கேவலம்.” என தெரிவித்துள்ளார்.