ஃபிலிம் ஃபேர் சினிமா விருது விழாவிற்கு நடிகர்கள் யாரும் செல்ல வேண்டாம் என நடிகர் சங்கம் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, எந்த ஒரு சினிமா விருது விழா அல்லது சினிமா நிகழ்ச்சியை ஏதேனும் ஒரு அமைப்பு நடத்தி, அதில் நடிகர்கள் பங்கேற்றால் அந்த அமைப்பு நடிகர் சங்கத்திற்கு நிதி வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அந்த நிதியைக் கொண்டு நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் தனியார் தொலைக்காட்சிகள் சில நடத்திய சினிமா விருது விழா நிகழ்ச்சிகளுக்காக, அந்தத் தொலைக்காட்சிகள் நடிகர் சங்கத்திற்கு நிதி வழங்கியிருந்தன.
இந்நிலையில் ஹைதராபாத்தில் வரும் 16ஆம் தேதி ஃபிலிம் ஃபேர் சினிமா விருதுகள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்காக தமிழ் திரையுலக நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் அமைப்பிடம் இருந்து நடிகர் சங்கத்திற்கு நிதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த விருது விழாவிற்கு நடிகர்கள் யாரும் செல்ல வேண்டாம் என நடிகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த விழாவிற்கு செல்ல நடிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.