சச்சின், தோனி, மித்தாலி ராஜ் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரின் பயோபிக் படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், பல வருடங்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பயோபிக் படம் குறித்து பேச்சுக்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அப்போது அந்த செய்திகளை அவர் மறுத்து வந்தார்.
இந்தநிலையில், தனது பயோபிக் படம் எடுக்க தற்போது கங்குலி சம்மதம் தெரிவித்திருக்கிறார். ``ஆம், எனது பயோபிக் படத்தை எடுக்க சம்மதித்துள்ளேன். இந்தியில் எடுக்கப்பட இருக்கிறது. தற்போது இயக்குநரின் பெயரை வெளியிடுவது சாத்தியமில்லை. ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும்" என்று கூறி கங்குலி தனது பயோபிக்கை உறுதிப்படுத்தினார்.
பாலிவுட் வட்டாரங்களின்படி, கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கங்குலியே அவரின் பெயரை பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் 200 - 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகலாம் என்றும், இந்தி சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கங்குலியை பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகியோரும் அணுகி பேசியதாகவும் கூறப்படுகிறது.
கங்குலியின் இளமை வாழ்க்கை முதல் அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறி, கேப்டன் பின்னர் இந்திய கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் இந்தப் பயோபிக்கில் இடம்பெறலாம். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் கங்குலி மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.