சினிமா

நாட்டிற்கு செய்த பங்களிப்பிற்கு எங்களின் மரியாதை: கேப்டன் கோபிநாத்துக்கு சூர்யா பதில்

sharpana

’சூரரைப் போற்று படம் என்னை அழ வைத்தது’ என்று உருக்கமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் ட்விட்டிற்கு சூர்யா நெகிழ்ந்துபோய் பதிலளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா,அபர்ணா முரளி நடிப்பில் வெற்றி பெற்றுள்ள சூரரைப் போற்று திரைப்படம் இந்தியாவில் முதல் முறையாக குறைந்த விலையில் விமானப் பயணங்களை சாத்தியமாக்கிய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை. ’simply fly: a deccon odyssey’ என்ற கோபிநாத்தின் சுயசரிதை புத்தகத்தின் ஒரு பகுதியைத்தான் சுதா கொங்கரா படமாக்கியுள்ளார். நேற்று முன் தினம் வெளியான, இப்படத்தை ரசிகர்கள் ’சுதாவை போற்று; சூர்யாவைப் போற்று’ என்று கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில். கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று இரவுதான் சூரரைப் போற்று பார்த்தேன். சிலக் காட்சிகளில் சிரிக்கவும் செய்தேன்; சிலக் குடும்பக் காட்சிகள் என்னை அழச்செய்தது. இந்தக் காட்சிகள் எல்லாம் என் நினைவை மீட்டு பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.

அபர்ணா பாத்திரத்தின் என் மனைவி பார்கவி சித்தரிப்பு அழகாக இருந்தது. வளரத்துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் பாத்திரத்தை சரியாகவும் வலிமையாகவும் செய்து காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா. இதுபோன்ற பொருளாதார சூழலில், இந்தப் படம் பலருக்கும் உத்வேகமாக அமையும். சூரரைப் போற்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய நூலின் முக்கிய நோக்கத்தை சரியாக பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பெரிய சல்யூட்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதனை ரீட்விட் செய்துள்ள சூர்யா நெகிழ்ச்சியுடன் “அன்புள்ள கேப்டன், சூரரைப் போற்று படத்தை உற்சாகமுடன் பார்த்ததது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எங்கள் நாட்டிற்காக செய்த பங்களிப்பிற்கு மரியாதை செலுத்துவதற்கான சிறிய வழி இது. இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.