சினிமா

சோனு சூட் ஹீரோவாக நடிக்கும் 'கிசான்' - டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கதையா?

sharpana

தபாங், சந்திரமுகி, அருந்ததி என பல படங்களில் வில்லன் நடிகராக மட்டுமே நடித்துவந்த சோனு சூட் பாலிவுட்டில் ’கிசான்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான “ட்ரீம் கேர்ள்” படத்தை இயக்கிய ராஜ் சாண்டில்யாதான் ’கிசான்’ தயாரிக்கிறார்.  கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘shool’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்ற ஈஸ்வர் நிவாஸ்தான் இப்படத்தை இயக்குகிறார். இவர், ராம் கோபால் வர்மாவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் உதவிகளை செய்த சோனு சூட்டின் சேவையை பாராட்டி ரசிகர்கள் கோவிலே கட்டிவிட்டார்கள். இன்னும் சிலர் அன்போடு தங்கள் குழந்தைகளுக்கும், கடைகளுக்கும் அவரின் பெயரை வைத்துள்ளார்கள். வில்லன் நடிகரான சோனு சூட்டை ‘ரியல் ஹீரோ’ என்றே பாராட்டுகிறார்கள். கொரோனா ஊரடங்கு சோனு சூட்டின் மனிதநேயத்தை வெளிக்கொண்டு வந்தது. இதனால், பலர் அவரை ஹீரோவாகவே நடிக்கசொல்லி அணுகினார்கள். ஆனால், அவர் ஏற்கவில்லை. தெலுங்கில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான், ‘கிசான்’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் ஆதரவாக ஒலித்தக்குரல் சோனு சூட்தான்.  ‘என் கடவுள் விவசாயிகள்தான்’, ‘விவசாயிகள்தான் நம் நாட்டின் பெருமை’ என்றெல்லாம்  பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கிசான் படத்தில் நடிப்பதால் விவசாயம் சார்ந்த கதையா? டெல்லி போராட்டம் குறித்த கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும் கிளம்பியுள்ளன. நடிகர் அமிதாப் பச்சன் கிசான் படத்தினை வாழ்த்தியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.