சினிமா

'ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு 8 சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்!'

'ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு 8 சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்!'

sharpana

'ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.10 கோடிக்கு தனது 8 சொத்துகளை நடிகர் சோனு சூட் அடமானம் வைத்துள்ளார்' என்ற தகவல் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 இந்தியாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென்று போடப்பட்ட ஊரடங்கால் போக்குவரத்து செய்ய முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்தசமயத்தில், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள், விமானங்களில் அனுப்பி பேருதவியை செய்து புகழ் பெற்றார் நடிகர் சோனு சூட். அதேபோல ரஷ்யா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தவித்து வந்த மாணவர்களையும் இந்தியாவுக்கு சொந்த செலவில் விமானங்களில் அழைத்து வந்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் உதவிக்கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறவர். ஏழை பெண்களுக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, செல்போன் டவர் கிடைக்காத மலைக்கிராம மாணவர்களுக்கு டவர் அமைத்துக் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைப்பவர்களுக்கு சொந்த செலவில் மருத்துவ உதவிகளை செய்வது என இப்போதுவரை சோனு சூட்டின் உதவிகள் தொடர்ந்து வருகின்றன. அதேநேரத்தில், அவருக்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என எட்டு சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே  10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்றும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் லோன் வாங்க கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி நவம்பர் 24 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் 'மணி கன்ட்ரோல்' வர்த்தகச் செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியாவின் குடியிருப்பு சேவைகள் மூத்த இயக்குநரும் தலைவருமான ரித்தேஷ் மேத்தா கூறும்போது, ”இதுபோன்ற செயல்கள் நான் கேள்விப்படாதவை. பத்து கோடி கடனுக்கு எதிராக வட்டி மற்றும் அசல் செலுத்த வேண்டும்” என்றார்.