சினிமா

செல்ஃபி எடுக்க மறுத்த பாடகர் சோனு நிகாமை தாக்கிய MLA-வின் மகன்... விளக்கம் கொடுத்த தந்தை!

செல்ஃபி எடுக்க மறுத்த பாடகர் சோனு நிகாமை தாக்கிய MLA-வின் மகன்... விளக்கம் கொடுத்த தந்தை!

சங்கீதா

பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்ததால், அவர் மற்றும் அவரது உதவியாளர் மீது, மாகாராஷ்ட்ரா மாநில எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகரின் மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். எனினும் அது அவர்களின் தனிமனித உரிமையை பாதிக்காத வகையில் இருக்கும் வரை பிரச்னையில்லை. அதுவே எல்லை மீறிப் போகும்போது மோசமான அனுபவமே நிகழும். அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தான் மும்பையில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட நட்சத்திர ஓட்டலுக்கு சென்றபோது செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்ததால் தாக்குதல் நடந்திருந்தது. அச்சம்பவத்தின் சுவடு முடிவதற்குள் அடுத்ததாக இன்னொரு சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது.

இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் பாடி பிரபலமான பாடகராக இருந்து வருபவர் சோனு நிகாம். தமிழில் சகுனி படத்தில் ‘மனசெல்லாம் மழையே’, கிரீடம் படத்தில் ‘விழியில்’, ஜீன்ஸ் படத்தில் ‘வாராயோ தோழி’ உள்பட சிலப் பாடல்களை பாடியுள்ளார் சோனு நிகாம். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூரில் நேற்றிரவு நேரலை இசை நிகழ்ச்சியொன்றில் பாடகர் சோனு நிகாம் பாடிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சோனு நிகாம் மேடையில் இருந்து படிக்கட்டுகளில் தனது உதவியாளர்களுடன் இறங்கியபோது அங்கு சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவின் எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகரின் மகனான ஸ்வப்னில் படேர்பேகர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சிசெய்துள்ளார்.

ஆனால், இதற்கு சோனு நிகாம் மறுப்பு தெரிவித்து கீழேயிறங்கிக்கொண்டு இருக்க, அப்போது அவரது பாதுகாவலர்களுக்கும், ஸ்வப்னில் படேர்பேகர் மற்றும் அவரது ஆட்களுக்கும் மோதல் நிகழ்ந்தது. இதில் பாடகர் சோனு நிகாமை பின்னாடி இருந்து ஸ்வப்னில் படேர்பேகர் ஆட்கள் கீழே தள்ளியுள்ளதாக தெரிகிறது. மேலும், சோனு நிகாமின் உதவியாளர் ரப்பானி என்பவரை மோசமாக கீழே தள்ளியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற நிகழ்ச்சி பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்தியுள்ளனர். எனினும், இந்த மோதலில் பாடகர் சோனு நிகாமின் உதவியாளர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சோனு நிகாம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், எம்எல்ஏ மகன் ஸ்வப்னில் படேர்பேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாஜக தலைவர் ஷெசாத் பூன்வாலா, உத்தவ் தாக்கரே பிரிவு எம்எல்ஏக்களை கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து, ஸ்வப்னில் படேர்பேகரின் தந்தையும், மகாராஷ்ட்ரா எம்எல்ஏவுமான பிரகாஷ் படேர்பேகர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘வீடியோவை நன்றாக பாருங்கள் தவறுதலாக நடந்தது தெரியும். வேண்டுமென்றே அவன், அவர்களை தாக்கவும் இல்லை, தள்ளிவிடவும் இல்லை. மேடையை விட்டு வெளியேறும் நேரத்தில், அவர் செல்ஃபி எடுக்க முயன்றார். நடந்தது தவறுதான். எனது மகனாக இருந்தாலும் மிகவும் கண்ணியமானவன்.. இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். பாடகர் சோனு நிகாம் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை திரைத்துறையில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.