சினிமா

சோனாலி பிந்த்ரேவைத் தாக்கிய மெடாஸ்டாடிக் கேன்சர்… பாதிப்பு என்ன? மீள வாய்ப்பு என்ன?

சோனாலி பிந்த்ரேவைத் தாக்கிய மெடாஸ்டாடிக் கேன்சர்… பாதிப்பு என்ன? மீள வாய்ப்பு என்ன?

webteam

கடந்த ஜூலை 4ஆம் தேதி‘நான் மெடாஸ்டாடிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவருகிறேன்’ – என்று வெளிப்படையாக அறிவித்தார் பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே. ‘காதலர் தினம்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும் பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்த சோனாலியின் இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் கேன்சர் குறித்த எச்சரிக்கை உணர்வை மீண்டும் எழுப்பி இருக்கிறது. மெடாஸ்டாடிக் கேன்சர் என்றால் என்ன? – பார்ப்போம்.

கேன்சரின் தீவிர நிலையே மெடாஸ்டாடிக் கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது உடலில் ஒரு உறுப்பைத் தாக்கும் கேன்சர் கிருமிகள் அங்கு நிலைபெற்று, வலிமை பெற்று, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு மூலம் பிற பகுதிகளுக்கும் பரவும் நிலையே மெடாஸ்டாடிக் கேன்சர் ஆகும். இது கேன்சரின் 4ஆவது படிநிலை.

அனைத்து புற்றுநோய்களும் தீவிரமடைந்து மெடாஸ்டாடிக் கேன்சராக மாறக் கூடியவை. இந்த நிலை உயிர் அபாயத்தை அதிகரிக்கின்றது. மெடாஸ்டாடிக் கேன்சர்கள் எந்த இடத்தில் இருந்து பரவத் தொடங்குகின்றதோ அந்த இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக எலும்பில் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவினால் அது ‘மெடாஸ்டாடிக் போன் கேன்சர்’ என்று அழைக்கப்படும்.

இந்தியாவில் இப்போது 25 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7 லட்சம் பேருக்கு கேன்சர் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. கேன்சர் தொற்று எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மெடாஸ்டாடிக் கேன்சர் வேறு இடத்துக்குப் பரவாமல் பார்த்துக் கொண்டே, பாதிக்கப்பட்ட இடத்தையும் குணப்படுத்த வேண்டும் என்பதால் இதற்கான சிகிச்சைகள் கடினமானவை. ஆனால் மன உறுதியால் மெடாஸ்டாடிக் கேன்சரை வென்றவர்கள் இருக்கிறார்கள். காதலர் தினம் திரைப்படத்தின் இறுதிக் காட்சிபோல, அதன் நாயகி இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குணமாக வேண்டும் என்ற கதாநாயகனின் விருப்பமே நம் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.