திடீரென வானத்திலிருந்து விண்வெளி ஆய்வகம் விழுந்து, ஊரே அழியப்போகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்? இதுதான் ‘ஸ்கைலேப்’ படத்தின் ஒன்லைன்.
படத்தின் துவக்கத்தில் ’ஸ்கைலேப்’ எனப்படும் விண்ணாய்வகம் வீழ்வதற்காக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தத் தகவல் வரும் ஓப்பனிங் காட்சியால் படம் முழுக்க விஞ்ஞானிகள், செயற்கைக்கோள்கள் என ’சயின்ஸ் ஃபிக்சன்’ ரேஞ்சுக்கு விண்வெளியில் பறந்துகொண்டு இருக்கப் போகிறார்கள்போல என்று கொஞ்சம் ஜெர்க் ஆகி பார்க்க ஆரம்பித்தால், பச்சை பசேல் வயல், திடீரென்று சைக்கிளில் தள்ளாடியபடி வரும் முதியவர், எப்போது வேண்டுமானாலும் சக்கரம் கழன்று ஓடிவிடும் பழைய பேருந்து, இழுத்து மூடப்பட்டு ’கோமா’வில் இருக்கும் ஆரம்ப சுகாதாரநிலையம், மருத்துவம் அறியாத மக்கள் என ’சயின்ஸ்’ என்றாலே என்னவென்று தெரியாத குக்கிராமத்துக்குள் ’பீல் குட்’டோடு நம்மை அழைத்து சென்றுவிடுகிறது.
வழக்கமான செய்திகளை தப்புத்தப்பாக எழுதிவிட்டு தன்னை நிரூபிக்கத் துடிக்கும் பத்திரிகையாளர் கெளரியாக நித்யாமேனன். மருத்துவ லைசென்ஸை இழந்து எப்படியாவது மருத்துவம் பார்த்து சம்பாதித்த பணத்தில் லைசென்ஸை திரும்பப்பெற கிராமத்துக்கு வரும் டாக்டர் ஆனந்தாக சத்தியதேவ். ’நாங்கள் சுபேதார்’ என்று பரம்பரைப் பெருமை பேசும் குடும்பத்தில் பிறந்து ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கும் ராமா ராவ்வாக ராகுல் ராமகிருஷ்ணா. இவர்கள் மூவரையும் சுற்றி வரும் ’ஸ்கை லேப்’ கதைக்களம் ஓப்பனிங்கிலிருந்து க்ளைமாக்ஸ்வரை அன்லிமிட்டெட் நகைச்சுவையை அள்ளிவீசி போர் அடிக்காமல் பயணிக்க வைக்கிறது. குறிப்பாக, நடிகர் சத்யதேவ்வின் நகைச்சுவை எக்ஸ்பிரஷன்கள் நச்.
காட்சிக்கு காட்சி நித்தமும் பேரழகியாக காட்சியளிக்கிறார் நித்யா மேனன். அவரது காஸ்ட்டியூம்களும் கவனிக்க வைக்கின்றன. ’பயத்தை உண்டாக்கி எழுதும் செய்தியைவிட உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கும்போது வெற்றியடையலாம்’... ’பார்க்குற பார்வையும் எழுதுற பொறுமையும் இருந்தா கிராமங்களில் நிறைய கதைகள் இருக்கு’ போன்ற வசனங்கள் பார்வையாளர்களின் பார்வையை விரிவாக்குவதோடு மட்டுமல்ல, ஊடகங்களின் பார்வையையும் ‘பளிச்’ ஆக்கியிருக்கிறது.
படத்தின் பெயர்தான் ’ஸ்கைலேப்’ எனப்படும் விண்ணாய்வகம். ஆனால், படம் முழுக்க மண்ணில் மனிதர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ’மண்ணாய்வகம்’ செய்து நம் மனதை நெகிழ்ச்சியில் சிறகடித்து பறக்க வைக்கிறார் இயக்குநர் விஷ்வக் கண்டேராவ். இவற்றையெல்லாம் தாண்டி, எந்த ஒரு சினிமாவிலும் நாயகன், நாயகி இருந்தால் அவர்களுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்ற வழக்கமான சினிமா எத்திக்ஸ்களை செயலிழக்க வைத்து ஆழ்கடலில் தூக்கி வீசியதே இயக்குநரின் வேற லெவல் தைரியம்.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஆந்திராவின் கரீம் நகர், நிஜாமாபாத் பகுதிகளில் நாசாவின் ‘ஸ்கைலேப்’ விண்வெளி ஆய்வு மையம் விழுந்துவிடும் என்றத் தகவலால், அப்பகுதி மக்கள் வீடுகளை காலிசெய்தும் விற்றுவிட்டும் ஓடிய உண்மைச் சம்பவத்தினை கேட்டுக் கேட்டு வளர்ந்த சிறுவன்தான், இப்படத்தின் இயக்குநர் விஷ்வக் கண்டரோவ். தங்கள் முன்னோரின் பீதியையே உண்மையும் கற்பனையும் கலந்து தனது 30 வயதில் ‘ஸ்கைலேப்’ படமாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். இவரும், கரீம் நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்த தெலுங்கு சினிமா தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. நடிகை நித்யா மேனன் தயாரித்துள்ளதோடு, தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு முதன்முறையாக இப்படத்திற்காக சொந்தக்குரலிலும் பேசியிருக்கிறார்.
”ரெண்டு வியாபாரிகள் செருப்பு விற்கிறதுக்காக ஒரு கிராமத்துக்கு போனாங்களாம். அங்க யாருமே செருப்பு போடலை. அதனால, இங்க செருப்பு வியாபாரம் ஆகாதுன்னு ஒரு வியாபாரி போய்ட்டாராம். இன்னொருத்தர் இங்கதான் செருப்பு வியாபாரம் அதிகமாகும்னு விற்க ஆரம்பிச்சாராம்” என்பது படத்தில் வரும் ’கேஷுவல்’ உதாரணக்கதைதான். ஆனால், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஊடக கவனமும் அதிகமாக கிராமப்புறங்களை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் ‘கேஷுவ் நட்’ போன்ற மதிப்பு வாய்ந்த உதாரணக்கதை.
தீண்டாமையால் நாடி பிடித்துக்கூட பார்க்காத வைத்தியரால் வயிற்றில் வளர்வது குழந்தை என்பதுகூட தெரியாமல் கட்டி என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து குழந்தையை நாயகன் கையிலேந்தும் காட்சியாகட்டும்... தாயின் சிகிச்சைக்காக குளத்தில் வீசப்படும் காசுகளை சேகரிக்கும் சிறுவன் என நம் கண்களிலும் இதயத்திலும் ஆனந்தக் கண்ணீரை வரவைக்கும் காட்சிகள் படம் முழுக்க உண்டு. முதற்பாதியில் வைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் வெறும் சிரிப்பதற்கு மட்டுமல்ல என்பதை உணர்த்திவிடுகின்றன, இரண்டாம் பாதியில் வரும் அதேக்காட்சிகளின் தொடர்ச்சிகள்.
ஒரு மரணபயம் எப்படியெல்லாம் மனிதர்களை ஒன்றுபடுத்தும் என்பதை சிரிப்போடு சிந்திக்கவும் வைத்து அழகுக்குவியலாய் காட்சிப்படுத்தியிருக்கிறது ‘ஸ்கைலேப்’. அதாவது, ஒருவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும் மரண பயத்தை காண்பித்து நன்றாக வாழக் கற்றுக்கொடுக்கிறது.
’2021’ ஆந்திர மாநிலத்திற்கு பெருமையான ஆண்டுதான். ஒலிம்பிக்கில் பி.வி சிந்து வெண்கலம் வென்று ’இரண்டு பதக்கம் வென்ற முதல் பெண்’ என்ற சாதனையைப் படைத்தது மட்டுமல்ல. ’உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற இரண்டாவது தெலுங்கர்’ என்ற பெருமையை நீதிபதி என்.வி ரமணா பெற்றது மட்டுமல்ல. 90 ஆண்டுகள் கொண்ட தெலுங்கு சினிமாவில் பறக்கவிட்டு அடிக்கும் ’ஆக்ஷன்’ படங்களுக்கு மத்தியில் ’அறிவார்ந்த’ கருத்துகளுடன் வெளியான ‘ஸ்கை லேப்’ படமும் பெருமைதான். படத்தில் வரும் ஆசிரியர் நித்யாமேனனுக்கு கொடுப்பதுபோலவே நாமும் இயக்குநருக்கு மதிப்பெண் கொடுத்துவிடலாம், பார்வையாளராக.
- வினி சர்பனா