sj surya pt web
சினிமா

இறைவி ’அருள் தாஸ்’ to மார்க் ஆண்டனி ’ஜாக் பாண்டியன்’ - மிரட்டும் "நடிப்பு அரக்கன்" எஸ்.ஜே.சூர்யா!

நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா; இறைவி முதல் மார்க் ஆண்டனி வரை

Angeshwar G

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களை மிரளவைக்கும் ஒருவராக திகழ்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி போன்ற படங்களின் மூலம் இயக்குநராக தனது வாழ்வை ஆரம்பித்த இவர், ஒருகட்டத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். நியூ படத்தில் அவரே நடித்து இயக்கவும் செய்தார். அதன்பிறகு கள்வனின் காதலி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் முழு நேர நடிகராக வலம் வந்தார். இடையில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்த அவர் இசை படத்தின் மூலம் தன்னை மீண்டு நிலைநாட்டினார். ஆனாலும் அவருக்கு பெரிய இடைவெளி ஏற்பட்டது. வை ராஜா வை, யட்சகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் மட்டும் தலைகாட்டினார்.

தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ்!

இவரது செகண்ட் இன்னிங்ஸ் இறைவியில் ஆரம்பிக்கப்பட்டது என்றே சொல்லலாம். இறைவிக்கு அடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் கதாநாயகனையும் தாண்டி ஸ்கோர் செய்து வருகிறார். சில திரைப்படங்களில் அவருக்கு கொடுக்கப்படும் வசனத்தை அவர் உச்சரிப்பது ட்ரெண்ட் ஆகும் என்றால் சில படங்களில் அவரது நடிப்பு பேசப்படும்.

திருப்புமுனையாக அமைந்த இறைவி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான இறைவி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. சினிமாவில் தோற்றவர், மதுவுக்கு அடிமையானவர், நடுத்தர வயதுடையவர்.. இது தான் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரம். படத்தின் க்ளைமேக்ஸில் விஜய்சேதுபதியை சுட்டபின் அவர் பேசும் காட்சிகள் இன்றும் பிரபலம். ஆண் நெடில்.. பெண் குறில், ஆண்.. எவ்வளவு கேவலமான பிறவிங்கள்ள நாம... என்பார். அடுத்து தனது மனைவிக்கு போன் செய்து குடிபோதையில் இருப்பது போன்று பேசும் காட்சி. சல்யூட் அடித்தனர் ரசிகர்கள். சினிமாவில் நடிகராக தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கினார் எஸ்.ஜே.சூர்யா.

ஸ்பைடரில் வில்லத்தனத்தில் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா!

அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர். மற்றவர்கள் துன்பப்படுவதை கண்டு ரசிக்கும் சைக்கோ. அந்த பின்னணி இசை, அவர் தனது காதுகளில் கை வைத்து மக்கள் அழுவதை கண்டு ரசிப்பது என அசத்தி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இன்றும் அந்த படம் பல டெம்லேட் மீம்ஸ்களுக்கு பயன்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

மெர்சலில் முத்திரை பதித்த வில்லன் கேரக்டர்!

அட்லீயின் இயக்கத்தில் மெர்சல் படத்தில், ஊருக்கு நல்லது செய்வது போல் வந்த வில்லன். தனது வில்லத்தன டயலாக்கை ஹஸ்கி குரலில் பேசுவது, தனக்கு வரப்போகும் லாபத்தை எண்ணி கண்களை விரித்து அதை சொல்வது, மருத்துவர் என்பதால் வசனங்களில் பாதியை ஆங்கிலத்தில் பேசுவது என தன்பாணி நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார். ’மார்க் மை வேட்.. இப்போ சிசேரியன்னு சொன்னா ஷாக் ஆகுறாங்க.. வருங்காலத்தில் நார்மல் டெலிவரினு சொன்னா ஷாக் ஆவாங்க’ என்று அவர் பேசும் வசனத்தின் போது அவரது உடல் மொழியிலும் உச்சரிப்பிலும் அவ்வளவு வில்லத்தனம் இருக்கும்.

கதாநாயகர்களை அலறவிட்ட எஸ்.ஜே.சூர்யா மான்ஸ்டரில் சட்டலான நடிப்பால் அசத்தினார்

இடையே கதாநாயகனாக நெஞ்சம் மறப்பதில்லை, மான்ஸ்டர் போன்ற படங்களிலும் நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஏற்ற கேரக்டர் என்றால் மான்ஸ்டர் படத்தில் மிகவும் செட்டில்ட் ஆன கேரக்டர். தனது நடிப்பு அதற்கான எல்லையை தாண்டியுள்ளது என விமர்சனம் எழுந்த நிலையில் மான்ஸ்டர் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அஞ்சனம் அழகியபிள்ளையாக வள்ளலார் பக்தராக நடித்துள்ளார். வில்லனாக நடித்து கதாநாயகர்களை அலற வைத்தவருக்கு அந்தப்படத்தில் வில்லனாக ஒரு எலி வந்தால் எப்படி இருக்கும். அதிலும் ஸ்கோர் செய்தார்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இடம்பெற்ற ’டே சும்மா இர்ரா..’ ’ரொம்ப சலிப்பா இருக்கு நண்பா..’ போன்ற வசனம் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கும் டெம்லேட்.

மாநாடு படத்தில் நடிப்பு அரக்கனாகவே மாறிய எஸ்.ஜே.சூர்யா!

இறைவில் தொடங்கிய இரண்டாவது பயணத்தில் அனைத்திற்கும் உச்சம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான டைம் லூப் திரைப்படம். சிம்பு நாயகன். அவருக்கும் படத்தின் வெற்றி மிக முக்கியம். படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் அனைத்தையும் தாண்டி மக்கள் பேசியது எஸ்.ஜே.சூர்யா. படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. வந்தான்.. சுட்டான்.. போனான்.. ரிப்பீட்டு என அவர் பேசியதை ரிப்பீட் மூடில் திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் பார்த்தனர். சிம்புவிற்கு ரசிகர்கள் மத்தியில் என்ன ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதே அளவிற்கு எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இருந்தது. தனது வில்லத்தனத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருப்பார். அதிலும் சிம்புவை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சிகளில் திரையரங்கே அதிர்ந்தது. தலைவரே.. தலைவரே என அவர் பேசிய வசனத்திற்கு அவ்வளவு தூரம் ரீச் கிடைத்தது.

இப்போது மார்க் ஆண்டனி. ட்ரைலர் வெளியானதில் இருந்தே எஸ்.ஜே.சூர்யா பேசப்பட்டார். படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் சொல்வதும், “எஸ்.ஜே.சூர்யா வேற லெவல் பா” என்பதே. பஸ் சீன், அவர் பேசும் காட்சிகள் அனைத்திற்கும் தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறது. எஸ்.ஜே.சூர்யாவிற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் என பலரும் பாராட்டுக்களை அள்ளி குவிக்கிறார்கள். விஷால் அசத்தலாக நடித்திருந்தாலும் ஷோ ஸ்டீலர் இவர் என பலரும் புகழ்ந்துள்ளனர்.

இயக்குநராக அறிமுகமாகி வெற்றிகளை கொடுத்து பின் நடிகராகி சற்று தடுமாறி இப்போது மீண்டும் உச்சத்தை தொட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ட்விட்டரில் அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார். அவரது தனித்துவமான வசன உச்சரிப்பும் அவரது பாவணைகளும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் உச்சத்தில் தான் இருப்பார்.