சினிமா

சிறிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் கவனம் ஈர்த்த 6 தமிழ் படங்கள்! #2022Rewind

சிறிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் கவனம் ஈர்த்த 6 தமிழ் படங்கள்! #2022Rewind

சங்கீதா

இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் எதிர்பாராதவிதமாக சர்ப்ரைஸ் ஹிட் அடித்தப் படங்கள் பற்றி பார்த்தோம். தற்போது சிறு பட்ஜெட்டுகளில் வித்தியாசமான கதைக்களத்தால் உருவாகி பார்வையாளர்களிடையே வரவேற்பு பெற்ற படங்கள் பற்றிப் பார்க்கலாம்.

1. கார்கி

சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘கார்கி’. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஒரு சிறுமி அனுபவிக்கும் வேதனைகளும், காப்பாற்ற வேண்டிய இரு மகள்களின் தந்தையே குற்றத்தை செய்திருப்பதும், அதற்காக அவரது மகளே சட்டத்தின் முன் தண்டனை வாங்கித் தருவதுபோன்ற வித்தியாசமான கதைக்களத்துடன் உருவானப் படம் தான் ‘கார்கி’.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பம் சமூகத்தால், மீடியாக்களால் அனுபவிக்கும் துயரத்தை மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குநர். அதேபோன்று முதலில் தனது தந்தை இந்தக் குற்றத்தை நிகழ்த்தியிருக்கமாட்டார் என்று நம்பும் கதாநாயகி சாய் பல்லவி, பின்னர் உண்மை தெரிய வரும்போது அவர் எடுக்கும் முடிவும் தமிழ் சினிமாவில் கண்டிராத ஒன்றுதான். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

2. ஆதார்

கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, பிரபாகர், உமா ரியாஸ் கான், இனியா ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் ‘ஆதார்’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்த இந்தப் படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்கியிருந்தார். சென்னையில் ஒரு கட்டிடத்தில் சாதாராண கூலித் தொழிலாளியாக இருக்கும் கருணாஸின் மனைவி ரித்விகாவிற்கு குழந்தைப் பிறக்கிறது.

அதற்குப் பிறகு ரித்விகா மட்டும் காணாமல் போவதும், பிறந்த குழந்தையுடன் தனது மனைவியை தேடும் கருணாஸ் பின்னர் போலீசாரின் நெருக்கடியால் மனைவியை தேடுவதை விட்டுவிட்டு ஒருவித சமரசத்துடன் சென்றுவிடுவதும், உண்மையில், ரித்விகாவுக்கும், அவருக்கு துணையாக இருந்த இனியாவுக்கும் போலீசாரால் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. மிக அழகாக எளியவர்களின் வலியையும், கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரத்தால், காவல்நிலையத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களும் ரசிகர்களை ஈர்த்து தனி இடத்தை இந்தப் படம் பிடித்ததே எனலாம்.

3. போத்தனூர் தபால் நிலையம்

1990 காலக்கட்டத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள போத்தனூர் தபால் நிலையத்தில் வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருக்கும் லட்சக்கணக்கிலான பணத்தை, வங்கியில் செலுத்த மறந்து விடுவதால், போஸ்ட் மாஸ்டர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது அந்தப் பணம் காணாமல் போவதும், அதனை கண்டுப்பிடிக்கச் செல்லும் போஸ்ட் மாஸ்டரின் மகனே, தனது நண்பன், காதலியுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிப்பதும் த்ரில்லர் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

உண்மையை மட்டுமே தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் போஸ்ட் மாஸ்டர், கை விரல் சூப்புவதை வெளியில் சொல்லிவிடுவதால் வங்கி மேலாளரிடமிருந்து கிடைக்காமல் போகும் கடன் உதவி, அப்பாவின் துயரை துடைக்கப் போய், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மகன் என காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சீக்குவல் உருவாகும் வகையில் படத்தின் இறுதியில் லீட் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கும். சிறு சிறு குறைகள் இருந்தாலும், ரசிகர்களை ஈர்த்தப் படங்களில் இதுவும் ஒன்று. பிரவீன் இயக்கி, நடித்திருந்த இந்தப் படத்தை ஆஹா ஓடிடி தளம் வெளியிட்டு இருந்தது.

4. பயணிகள் கவனிக்கவும்

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘விக்ருதி’ திரைப்படத்தின் ரீமேக் தான் ‘பயணிகள் கவனிக்கவும்’. ஆஹா ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் காது கேட்காத, வாய் பேச இயலாத நூலகராக நடித்திருப்பார் விதார்த். அவரின் மனைவியாக லட்சுமி ப்ரியா நடித்திருப்பார். எதையும் யோசிக்காமல், விசாரிக்காமல் ஆர்வ கோளாறால் பார்க்கும் விஷயங்களை எல்லாம் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு லைக் அள்ள விரும்புவராக கருணாகரன்.

தனது மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக தூங்காமல் மெட்ரோ ரயிலில் அசந்து தூங்கும்போது, விதார்த் குடித்துவிட்டு தூங்குவதாக, கருணாகரன் தவறாக பதிவிடும் ஒரு வீடியோவால், விதார்த்தின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை எப்படி மாறுகிறது என்றும், உண்மை தெரிந்தப்பின் கருணாகரன் சூழ்நிலையை கையாள பயப்படும் விஷயங்களையும் அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி. இந்தப் படம் ரசிகர்களிடையே பேசப்பட்ட படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

5. வாய்தா

‘கேடி என்கிற கருப்புத்துரை’ படத்தில் நடித்த மு.ராமசாமி, இஸ்திரி போடுபவராக இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரால் ஏற்படும் விபத்தால், மு.ராமசாமிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இஸ்திரி தொழிலாளிக்கு வேண்டியதே வலதுகை தான். ஆனால், விபத்தால் எலும்பு முறிவு ஏற்படும்போது, ஆதிக்க சாதியை சேர்ந்தவர் ஊரிலேயே கட்டப் பஞ்சாயத்து செய்து, இழப்பீடு கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதும், பின்னர் தாமதப்படுத்துவதுடன், சாதி பாகுபாடுகளால் முதியவரை அவனமானப்படுத்துவது என கதை நீளும்.

பின்னர் விபத்தில் காயமடைந்த முதியவருக்கு பஞ்சாயத்துக்கு வருவதுபோல் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் விஷயத்தை பெரிதாக்குவதும், பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று வாய்தாக்களை வைத்து அங்கு நடக்கும் அரசியலால் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக இயக்குநர் மதிவர்மன் காட்சிப்படுத்தியிருப்பார். சிறியப் பட்ஜெட்டில் உருவான இந்தப் படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் அணுகப்பட்டிருந்தது ரசிகர்களை ஈர்த்தது.

6. விட்னஸ்

இந்தியாவில் அனுதினமும் நடந்து வரும் மலக்குழி மரணங்களை கேள்வி கேட்கும் படமாக உருவானப் படம் தான் ‘விட்னஸ்’. சினிமாக்களில் பேசப்படாத பரிமாணங்களை பேசிய இந்தத் திரைப்படத்தில், ரோகிணி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மலக்குழிக்குள் இறங்கிய மகன் இறந்துபோய் தனிமையில் தவிக்கும் தாயாகவும், மகனின் மரணத்துக்கு துணிச்சலாக கேள்விக்கேட்டு காவல்துறையை அணுகுபவராகவும் ரோகிணி தன்னை நிரூபித்திருப்பார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தீபக் இயக்கியிருந்தார்.