கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இயக்குனர் வஸந்தின் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
‘கேளடி கண்மணி’, ‘ஆசை’,‘நீ பாதி நான் பாதி’, ‘நேருக்கு நேர்’, ‘சத்தம் போடாதே’ என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான இவரது ‘மூன்று பேர் மூன்று காதல்’ திரைப்படம் அவ்வளவாக வெற்றியடையவில்லை. அதன் பிறகு இப்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா, சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது.
இந்நிலையில் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 28வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இயக்குனர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.
எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி உள்ளார் இயக்குனர் வசந்த். இவரது பெயரை வஸந்த் எஸ் சாய் என மாற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.