சினிமா

இசை அமைக்க ’சொம்பு’ கேட்ட ’டிரம்ஸ்’ சிவமணி!

இசை அமைக்க ’சொம்பு’ கேட்ட ’டிரம்ஸ்’ சிவமணி!

webteam

சொம்பு ஒன்றின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்ததாக ’டிரம்ஸ்’ சிவமணி தெரிவித்தார்.

டெல்லியில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இன்று இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் ’டிரம்ஸ்’ சிவமணி. இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘டெல்லியில் பலமுறை இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். முதல் முறையாக 80-களில் ஜாஹிர் ஹூசைனுடன் பங்கேற்றேன். ஒரு முறை, டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்தபோது, அழகான சொம்பைக் கண்டேன். காப்பர் சொம்பு அது. பார்த்ததும் அதை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். ஓட்டல் மானேஜரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். அவர் ;தாராளமாக...’ என்று கொடுத்துவிட்டார். அன்று மாலை இசை நிகழ்ச்சியில் அதைப் பயன்படுத்தினேன். வித்தியாசமான சத்தத்தை அது கொடுத்தது.

இதே போல 90-களில் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றேன். லூயிஸ் பேங்கும் நானும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சி அது. பார்க் ஓட்டலில் தங்கியிருந்தேன். பால்கனியில் இருந்து பார்த்தபோது அழகான கடை ஒன்று தெரிந்தது. சென்றேன். ஏராளமான, பிரியாணி கடாய்கள் இருந்தன. அதை இசை நிகழ்ச்சியில் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியது. கடைக்காரரிடம் 10, 15 கடாய்களை கேட்டேன். அதில் நான்கு கடாய்கள் எனக்கு பொருத்தமாக இருந்தது. அதை நிகழ்ச்சியில் பயன்படுத்தினேன். ஏராளமானோர் அதை ரசித்தனர்’ என்றார்.

இப்படி வித்தியாசமாக யோசிக்க எப்படித் தோன்றியது? என்று சிவமணியிடம் கேட்டதற்கு, ‘ அப்போது எனக்கு 9 வயது இருக்கும். என் அப்பா ஆனந்தன் எல்லோருக்கும் தெரிந்த இசைக் கலைஞர். அவரது டிரம்ஸ் கிட்-களை என்னைத் தொட விடமாட்டார்.  கோபத்தில் வீட்டின் கிச்சனுக்கு சென்று பாத்திரங்களைத் தட்டி இசையை எழுப்புவேன். அந்த சத்தம் இனிமையாக இருந்தது. அதில் இருந்து என் இசைப் பயணத்தைத் தொடங்கினேன்’ என்றார்.