சினிமா

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ’தோனி பயோபிக்’ பட நடிகை?

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ’தோனி பயோபிக்’ பட நடிகை?

சங்கீதா

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி இரண்டுப் படங்களான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களும் சுமார் 100 கோடி ரூபாய்-க்கும் மேல் வசூலை குவித்துள்ளன. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் கே.வி. அனூதீப் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்.கே.20’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற நிலையில், தற்போது பாடல் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் மரியா ரியாபோஸப்கோ கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள ‘எஸ்.கே.21’ புதியப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்நிலையில், யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வினுடன், சிவகார்த்திகேயன் புதியப் படம் ஒன்றில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம், படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கியாரா அத்வானி, கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ‘எஸ்.கே.22’ படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படங்கள் மட்டுமின்றி நீண்ட நாள் தயாரிப்பில் உள்ள சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, இஷா கோபிகர், ஷரத் கேல்கெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுபபாக நடைபெற்று வருகிறது.