நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ’அமரன்’. ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கும் இத்திரைப்படம், தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடித்திருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன்முறையாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சி.எச். சாய் அறிமுகமாகிறார்.
அமரன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவரும் நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தியன் ஆர்மியில் பணியாற்றுவதில் கதாநாயகன் எந்தளவு தேசப்பற்றுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் காட்சிகளில் தொடங்கி, காதல், குடும்பம், கடினமான நேரத்தில் ஒரு ராணுவ வீரனாகவும், மேஜராகவும் எடுக்கும் முக்கிய முடிவுகள் என படம் அனைத்து விதமான எமோசனையும் வெளிப்படுத்தியுள்ளது.
காஷ்மீர் நிலப்பகுதியில் படத்தை எடுத்திருப்பது படத்திற்கு புதிய கலரையும், புதிய அனுபவத்தையும் கொடுக்கிறது. பின்னணியில் ஜிவி பிரகாஷ் நிறைவாக தெரிகிறார். படத்தின் ஓட்டம் அற்புதமாக இருக்கிறது. “இதுதான் இந்தியன் ஆர்மியின் முகம், என்னால முடிஞ்ச உயிர்களை காப்பாத்திட்டுதான் திரும்ப வருவேன், ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடுற போராளி மற்ற நாட்டுக்கு தீவிரவாதியாதான் தெரிவான்” என இடம்பெற்றுள்ள வசனங்களாக இருக்கட்டும்,
”என் கணவர் ராணுவ வீரனாக இருக்குறதும், நான் ஒரு ராணுவ வீரனோட மனைவியா இருக்கிறதும் எனக்கு சந்தோஷம்” என கதாநாயகி சொல்லும் வசனமாக இருக்கட்டும், ஆக்சன், எமோசன் என அனைத்திலும் வசனத்தை கடந்து காட்சிகளும் அதிகமாய் பேசுகின்றன.
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.