சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ சம்பள பாக்கி விவகாரம் - நீதிமன்றம் புதிய உத்தரவு

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ சம்பள பாக்கி விவகாரம் - நீதிமன்றம் புதிய உத்தரவு

சங்கீதா

'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி வழங்கக் கோரி, தயரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில், சமரச தீர்விற்கு அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் கோரிய எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதனை வழங்க பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட கோரியும், அதுவரை அவரின் தயாரிப்பில் வெளியாக உள்ள ‘பத்து தல’, ‘சீயான் 61’, ‘ரீபெல்’ ஆகிய படங்களை இணையதளம் உள்ளிட்டவைகளில் வெளியிட தடை விதிக்கக் கோரியும், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் விநியோகிஸ்தர்கள் பிரச்சனை குறித்து வழக்கில், எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்து, பிரச்சனையை தீர்வு காண உத்தரவிட்டார். அதேசமயம், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.