சினிமா

சிவகார்த்திகேயனை பாடாய்ப்படுத்திய தினேஷ் மாஸ்டர்!

சிவகார்த்திகேயனை பாடாய்ப்படுத்திய தினேஷ் மாஸ்டர்!

webteam

நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ’ஒரு குப்பைக் கதை’. மனிஷா ஹீரோயின். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி. 

மே-25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ’இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம்தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவில் ஆடும்போது, உடம்பு அலுக்காமல், வியர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன். ஆனால், எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். ஒரு துறைல இருந்து இன்னொரு துறையில் கால் வைக்கும்போது ’உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை’ என கேட்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போகவேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்துக்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது, பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்’ என்றார். 

இயக்குனர் அமீர் பேசும்போது, ’இந்தப்படத்தின் கதை, முதலில் என்னிடம் வந்தது. இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஓர் இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன். சுசீந்திரன் சொன்னமாதிரி இது எல்லா மனிதர்களும் கடந்துபோகக்கூடிய கதையாக இருக்கக் கூடாது. யாரும் கடந்து போகக்கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள். மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியை தேடி போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது. சினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள்.. ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசையில் தினேஷ் மாஸ்டரும் இருக்கிறார்’ என்றார்.