சினிமா

“எங்கள் பரம்பரையில் முதல் டாக்டர்” சிவகார்த்திகேயன் உதவியால் மருத்துவ கனவை எட்டிய மாணவி

“எங்கள் பரம்பரையில் முதல் டாக்டர்” சிவகார்த்திகேயன் உதவியால் மருத்துவ கனவை எட்டிய மாணவி

webteam

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ படிப்பு என்பது கேள்விக்குறியாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த நிலையில், தடைகளை உடைத்து மருத்துவப்படிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள பூக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சஹானா.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த இந்த ஏழை மாணவி மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவுடன் இருந்தது. பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலையில், நீட்தேர்வு காரணமாக மருத்துவ சீட்டு கிடைக்குமா என்ற அச்சத்தில் இருந்த மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் உதவிட, நடிகர் சிவகார்த்திகேயனும் சஹானாவிற்கு ஒரு வருட நீட் பயிற்சிக்கு தேவையான கட்டணத்தை செலுத்தி உதவியுள்ளார். இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றிப் பெற்று தனது மருத்துவ கனவை நனவாக்கியிருக்கிறார். 

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி கூறும் போது, “நான் அரசு பள்ளியில் படித்தேன். நீட் தேர்வுக்கு தயாராவதற்கு என்னுடைய தலைமை ஆசிரியர் உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனின் உதவியும் கிடைத்தது. அதன் மூலம் ஒரு வருட பயிற்சி எடுத்து, தமிழக அரசு வழங்கிய உள் ஒதுக்கீட்டில் தற்போது இடம் கிடைத்து மருத்துவ கனவில் காலடி எடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவும், பெறுமை நிறைந்த ஒன்றாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் நிச்சயம் நம்பிக்கையுடன் நீட் தேர்வை எதிர்கொண்டால் மருத்துவ இடம் கிடைப்பது உறுதி” என்றார்

இது குறித்து சஹானாவின் தாய் சித்ரா கூறும் போது, “ மின்சாரம் கூட இல்லாத வீடு, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மருத்துவ படிப்பு என்பது ஏழை வீடுகளுக்கு எடுபடுமா என்று இருந்த எங்களுக்கு என்னுடைய மகள் தற்போது மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பரம்பரையில் இவர்தான் முதல் டாக்டர்.” என்றார்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா கூறும் போது, “ இன்றைய நிகழ்ச்சியிலேயே ஹைலைட் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ள 10 மாணவர்கள் தான். முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் அச்சமின்றி கல்வி பயிலும் வகையில் மாணவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வகையில் பேராசிரியர்கள், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் Anti ragging குழு அமைத்து ragging இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.