விஜய் சிவகார்த்திகேயன் புதிய தலைமுறை
சினிமா

“ ‘துப்பாக்கியை பிடிங்க சிவா’ன்ற வசனத்தை விஜய் சார்தான் சேர்த்தார்” - மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் கேமியோ ரோலில் எண்ட்ரி கொடுத்தது குறித்தும், ஷூட்டிங்கில் வசனம் மாற்றப்பட்டது குறித்தும் முதல்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

யுவபுருஷ்

கடந்த செப்டம்பரில் வெளியான விஜய்யின் கோட் திரைப்படத்தில், க்ளைமேக்ஸ் காட்சியின்போது கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்த காட்சி சிறிது நேரம்தான் என்றாலும், விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்குமான உரையாடல் மிகவும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, இந்த காட்சியில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று காந்தி பாத்திரத்தில் நடித்த விஜய், துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைப்பார்.

அப்போது, ‘சார் நீங்க இதவிட ஒரு முக்கியமான வேலையா போறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க அதை பாருங்க சார். நான் இதை பார்த்துக்கிறேன்’ என்று கூறுவார் சிவகார்த்திகேயன். இதனைப் பார்த்த பலரும், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி அரசியலில் இறங்கும் விஜய், தனது பொறுப்பையே சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்ததாக பேசத்தொடங்கினர்.

Vijay and Sivakarthikeyan in The GOAT Movie

இந்த படத்தில் மட்ட பாடல் த்ரிஷா கேமியோவுக்குப் பிறகு அதிகமாக பேசப்பட்டது சிவகார்த்திகேயனின் கேமியோவும், வசனமும்தான். இந்த நிலையில்தான், கோட் படத்தில் நடித்தது குறித்து விரிவாக பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசினார்.

அப்போது பேசிய சிவா, “கோட் படத்தில் ஒரு கேமியோ இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார். படப்பிடிப்பு நடக்க துவங்கியபோதே அதை சொல்லியிருந்தார். ஆனால் என்ன சீன் என்றெல்லாம் சொல்லவில்லை. இருவருக்கும் இருக்கும் காட்சிக்கான பேப்பரைப் பார்த்து விஜய்யும் மகிழ்ந்துள்ளார். கடைசியாக, ஷூட்டிற்கு முந்தய நாள்தான் வெங்கட் பிரபு சீன் பேப்பரை அனுப்பினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்றைய தினம் காலையில் ஷூட்டிங் சென்றபோது, ’துப்பாக்கியை கொடுத்து வில்லன் மேனனை பார்த்துக்கோங்க. சுடக்கூடாது’ என்பதுதான் சீன் பேப்பரில் இருந்தது.

ஆனால், விஜய் சார்தான் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வசனத்தை சேர்த்து பேசினார். அது அவரது பெருந்தன்மை. சிலர் சினிமா பொறுப்பை ஒப்படைத்துவிட்டதாக பேசுகின்றனர். நான் அப்படி பார்க்கவில்லை. அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன். விஜய் awards-ல் அவரிடம் இருந்தே ஒருமுறை நான் விருது வாங்கினேன். கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருடன் ஸ்கிரீன் ஷேர் செய்தேன். இது இரண்டையுமே அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன்.

அவர்மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கு, இந்த இரண்டு Moments-ம் ரொம்ப ஸ்பெஷலாகவே இருக்கும்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

முன்னதாக வேறொரு நேர்காணலில் பேசிய வெங்கட் பிரபு,

“ ‘துப்பாக்கிய பிடிங்க சிவா. Ground ல இருக்க எல்லா உயிரும் உங்க கைலதான் இருக்கு’ என்ற வசனத்தை விஜய்தான் பெருந்தன்மையாக பேசினார். அதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.