பி.சுசீலா கோப்புப்படம்
சினிமா

‘இன்னிசை நாயகி’ பி.சுசீலாவின் 89-வது பிறந்த நாள் தினம் இன்று!

தேன்குழைத்த குரலில் தெவிட்டாத பாடல்களையும் அமுதகானங்களையும் வழங்கிய இன்னிசை நாயகி பி. சுசீலா இன்று தனது 89 ஆவது பிறந்தநாளை காண்கிறார்.

PT WEB

தேன்குழைத்த குரலில் தெவிட்டாத பாடல்களையும் அமுதகானங்களையும் வழங்கிய இன்னிசை நாயகி பி. சுசீலா இன்று தனது 89 ஆவது பிறந்தநாளை காண்கிறார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையிசையில் தனித்த இடத்தை பிடித்து, மயிலிறகு பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வருடிய பி.சுசிலா பிறந்தது ஆந்திராவில். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, ஓடியா, பெங்காலி, சமஸ்கிருதம், துளு, படகா என பல்வேறு மொழிகளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அப்பப்பா என நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் அவர்.

பி.சுசீலா

1935-ஆம் ஆண்டு பிறந்த சுசிலா தனது மதுரம் பொதிந்த குரலுக்காக இசையரசி எனப் போற்றப்பட்டவர். 5 முறை தேசிய விருது, 7 முறை ஆந்திர அரசின் விருது, 3 முறை கலைமாமணி விருது, 2 முறை கேரள அரசு விருது, பத்மபூஷண் என விருதுகளால் அலங்கரிக்கப்பட்டவர் சுசீலா.

1969-ஆம் ஆண்டு முதன்முறையாக அவர் தேசிய விருது வாங்கினார். உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடலுக்காக 1969-ஆம் ஆண்டு முதன்முறையாக தேசிய விருது வாங்கினார் சுசீலா.

தங்கமலை ரகசியம் என்ற படத்தில் வரும் ‘அமுதை பொழியும் நிலவே’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்...

1953-ஆம் ஆண்டு வெளியான பெற்ற தாய் என்ற படத்தில் ‘ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு’ என்ற பாடல்தான் சுசீலாவின் முதல் பாடல். தொடக்க காலத்தில் ஏ.வி. எம் நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் அவர் பின்னணிப் பாடகியாக இருந்துள்ளார். 1955 ஆம் ஆண்டு வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் சுசீலா பாடிய பாடல்கள் பெரும் ஹிட்.

பி.சுசீலா

இவரின் ‘உன்னை கண் தேடுதே’ என்ற உற்சாகமூட்டும் பாடல்களை இப்போதும் முணுமுணுக்கலாம்.. உத்தமபுத்திரன் படத்தில் ‘உன்னழகை கன்னியர்கள் சொன்னதனாலே’ என்ற பாடலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலை ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா பாடல் 2005-ஆம் ஆண்டு ஆடை என்ற படத்தில் இடம்பெற்றது. கடைசியாக 2018-ஆண்டு எல்.கே.ஜி என்ற திரைப்படத்தில் சுசீலா பாடினார். காலங்கள் நவீனமானாலும் இசைவிரும்புவோர் காதுகளில் சுசீலாவின் பாடல்கள் இன்னும் இளமை குன்றாது ஒலிக்கிறது.