பிரபல பாலிவுட் பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
1973-ம் ஆண்டு ‘நன்ஹா சிகாரி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் பப்பி லஹரி (Bappi lahiri). இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பப்பி டா என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், பாலிவுட் திரையுலகில் 70-80 காலக்கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். இவர், கடைசியாக 2020-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாகி 3’ படத்திற்காக 'பங்காஸ்' என்ற பாடலை பாடினார்.
80-90 ஆண்டுகளில் டிச்கோ இசையை பிரபலப்படுத்தியவர் பப்பி லஹரி. பாடகர் என்ற அடையாளத்தை தவிர, அதிர்ஷ்டத்திற்காக இவர் கழுத்தில் அணியும் தங்க சங்கிலிகளும், கண்ணாடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தமிழில் ‘பாடும் வானம்பாடி’ படத்தில் சங்கர் கணேஷ் உடன் இணைந்து பப்பி லஹரி இசைமையத்துள்ளார். இதேபோல் ‘அபூர்வ சகோதரிகள்’ படத்திற்கும் பப்பி லஹரி இசைமையத்துள்ளார்.
கடந்த 2021 ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பப்பி லஹரி. கொரோனாவில் இருந்து மீண்டாலும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்கட்கிழமையன்று வீடு திரும்பினார்.
ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடகி லதா மங்கேஷ்கர் உயிரிழந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் பப்பி லஹரி மரணமடைந்துள்ளது பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பப்பி லஹரிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.