உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையின் சிகிச்சைக்காக, நடிகர் சிம்பு அமெரிக்காவுக்கு முன்கூட்டியே சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் டி. ராஜேந்தர். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் என டி.ராஜேந்தரரின் மகனும், முன்னணி நடிகருமான சிம்பு அண்மையில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவனைக்கே நேரில் சென்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்பு அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் சிங்கப்பூர் செல்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்லவுள்ளார். வெளிநாடு செல்ல முடிவு செய்து சமீபத்தில் விசா அனுமதிப்பெற்றநிலையில், வருகிற 14-ம் தேதி அவர் அமெரிக்கா செல்கிறார்.
மேலும் டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும், அவருக்கு முன்னதாகவே, அவரின் மகன் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தையின் சிகச்சை முடிந்து நலமானதற்குப் பின்னே ஊர் திரும்புவார் என்பதால், ‘பத்து தல’ படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.