சினிமா

மக்கள் கொல்லப்பட்டிருக்கும் நேரத்தில் காப்பருக்கு ஆதரவாக பேசுவதா? - சித்தார்த்

rajakannan

மக்கள் கொல்லப்பட்டிருக்கும் நேரத்தில் காப்பரின் பயன்பாட்டைப்பற்றி பேசுவதா என்று ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. கொள்கை முடிவு எடுத்து ஆலை மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், காப்பர் ஆலைக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டு இருந்தார். அதில், “காப்பர்(செம்பு) உருக்கு ஆலை குறித்த நிபுணர் நான் இல்லை. ஆனால், இந்தியாவில் செம்பு(காப்பர்) பயன்பாடு அதிக அளவில் உள்ளது. நாம் செம்புவை உற்பத்தி செய்யவில்லை என்றால் சீனாவில் இருந்து வாங்க வேண்டிய வரும். சுற்றுச் சூழல் விதி மீறல்களை சட்டப்படி அணுக வேண்டும். பெரிய தொழில்களை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை” என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவின் கருத்தினை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் அலுவலம் ஒரு வெட்கக்கேடு. யோகாவை பற்றி பேசும் பிரதமருக்கு இதனைப் பற்றி பேச நேரமில்லை. காப்பர் ஆலையின் பயன்களை பட்டியலிடும் நேரம் இது இல்லை சத்குரு. மக்கள் போலீசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நிறுத்துங்கள். குடிமக்களை சுடுவது என்பது கொலை. தற்போது கொலையை பற்றி பேசுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.