சித்தார்த்  x வலைதளம்
சினிமா

“சித்தார்த் படத்தையெல்லாம் யார் பார்ப்பாங்கனு சொன்னாங்க” - கண்கலங்கி பேசிய நடிகர் சித்தார்த்!

“தெலுங்கில் ‘சித்தார்த் படத்தை யாரு பார்ப்பாங்க’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘நல்ல படமாக இருந்தால் நிச்சயம் பார்க்க வருவார்கள்’ என்று கூறினேன்” - நடிகர் சித்தார்த் பேச்சு

ஜெனிட்டா ரோஸ்லின்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற திரைப்படங்கள் மூலமாக இயக்குநராக தடம் பதித்தவர் இயக்குநர் அருண்குமார். இவர் தற்போது எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சித்தார்த்தை வைத்து சித்தா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழில் வெளியான இத்திரைப்படம், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அழுத்தமாக பேசுகிறது. விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சித்தா படம்.

சித்தா

தமிழ், மலையாளம், கன்னடா போன்ற மொழிகளில் சித்தா திரைப்படம் கடந்த வாரமே வெளியாகிவிட்டது. இருப்பினும் கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு பிறகு, அதாவது இந்த வாரம்தான் தெலுங்கில் ’சின்னா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. அக்.6 இப்படம் வெளியாக உள்ளது என்றபோதிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இப்படத்தை திரையிடுவதற்கென்று போதுமான அளவு திரைகள் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து ஏசியன் பிலிம்ஸ் இப்படத்தை விநியோகம் செய்ய முன்வந்துள்ளது.

இந்நிலையில் ‘சின்னா’ திரைப்படத்தின் தெலுங்கு பட ப்ரோமோஷன் விழா ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த், தெலுங்கு திரையுலகில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து கண்கலங்க பேசியுள்ளார். “தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ‘இப்படியொரு நல்ல படத்தை நிச்சயம் வாங்கிக்கொள்கிறோம்’ என்றுகூறி என் படத்தை வாங்கினார். கேரளாவில் முன்னணி நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் சினிமாஸின் கோகுலம் கோபாலன் சார் எனது படத்தை பார்த்துவிட்டு ‘என் 55 வருட அனுபவத்தில் இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை’ என்று கூறி படத்தின் உரிமத்தை வாங்கினார்.

சின்னா பட ப்ரொமோஷனில் சித்தார்த்

கர்நாடகாவில் kgf திரைப்படத்தின் தயாரிப்பாளர் எனது படத்தின் உரிமத்தை வாங்கி இருக்கிறார். ஆனால் தெலுங்கில் ‘சித்தார்த் படத்தை யாரு பார்ப்பாங்க’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘நல்ல படமாக இருந்தால் நிச்சயம் பார்க்க வருவார்கள்’ என்று கூறினேன். இப்படியான சமயத்தில்தான் ஏசியன் பிலிம்ஸ் இப்படத்தை விநியோகம் செய்ய முன்வந்துள்ளது.

நீங்கள் சினிமாவை நம்பினால், சினிமாவை நேசிப்பவராக இருந்தால் தயவு செய்து சித்தா படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள்.
சித்தார்த்

இதனை பார்த்தபிறகு ‘சித்தார்த்தின் படத்தை இனி பார்க்க வேண்டாம்’ என்று தோன்றினால் இனிமேல் இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்புகளை நான் நடத்தமாட்டேன்” என்று கண்கலங்க பேசியுள்ளார்.

சித்தார்த் பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது.