வெடிகுண்டுகள் வீசப்பட்டதுபோல் புழுதியை பறக்கவிட்டு ஜெட் வேகத்தில் சீறிப்பாயும் கார்கள். நம் முகத்தில் பட்டு வழிகிறதோ என்று பட்டென்று தொட்டுப் பார்த்துக்கொள்ள வைக்கும் குபு குபு கொப்பளித்து தெறிக்கும் ரணகள ரத்தம். அரைமணிநேரம் கழித்து கீழே விழும் அடி-உதை வாங்கிய வில்லன்கள். சூடம் ஏற்றி தீபாராதனை காட்டுவதுபோல கைகளாலேயே காரை தூக்கி கதிகலங்க வைக்கும் காட்சிகள். ரயில்வே ட்ராக்கில் ட்ரயினையே ஓவர்டேக் பண்ணி ஓடும் ஓவர் ஆக்டிங். எலியின் வாலைப் பிடித்து சுற்றுவதுபோல பறந்துகொண்டிருக்கும் ஃப்ளைட்டின் றெக்கையையே துள்ளிப் பிடித்து சுழற்றும் ஹீரோக்கள் என தெலுங்கில் பல அதீத அதிரடி காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகிய தமிழ் ரசிகர்களுக்கு ’ஷ்யாம் சிங்கா ராய்’ நிச்சயம் ‘ஷாக்’ கொடுக்கும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதே சாதிய ஒடுக்குமுறைகளும் பெண்ணிய அடக்குமுறைகளும்தான். இந்த ஒடுக்கு-அடக்குமுறைகளுக்கு எதிராக காயம்பட்ட சிங்கமாய் பாய்ந்து கர்ஜிக்கிறது ’ஷ்யாம் சிங்கா ராய்’.
திரைப்படம் இயக்குகிறார் வாசுதேவாக வரும் நானி. படம் செம்ம ஹிட் அடித்ததால் இந்தியிலும் ரீமேக் செய்வதற்கான ப்ரஸ்மீட் நடக்கிறது. அப்போது, எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் 1970 ஆம் ஆண்டு எழுதிய கதையை காப்பி அடித்து இயக்கிவிட்டதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் வாசுதேவ். யார் இந்த ஷ்யாம் சிங்கா ராய்? இதற்குமுன், அந்தக் கதையைப் படிக்காத இளம் இயக்குநர் வாசுதேவ் எப்படி மூத்த எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் எழுதிய கதையை படமாக எடுத்தார்? நீதிமன்றத்தில் தொடரப்பட்ட காப்பிரைட் வழக்கை இயக்குநர் வாசுதேவ் எப்படி எதிர்கொண்டார்? என்ற மீதிக்கதை மிரட்டியிருக்கிறது.
இரட்டை கதாபாத்திரங்களில் நானி. இயக்குநர் வாசு தேவ்வாக வரும் நானியைவிட எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராயாக வரும் நானியின் ’கெட் அப்’தான் செம்ம கெத்தாக இருக்கிறது. ’பஞ்ச்’ வசனங்கள் பேசி நம் காதுகளை ’பஞ்சர்’ பண்ணும் வழக்கமான கதையைத் தாண்டி இப்படிப்பட்ட கதையில் நடித்ததற்கே நானிக்கு விடலாம் எக்கச்சக்க ஹார்ட்டின்ஸ்.
அதுவும், அம்பிக்குள் இருக்கும் அந்நியனும் ரெமோவும் போல, எழுத்தாளனுக்குள் இருக்கும் புரட்சியாளனும் கவிஞனும் ‘நாட்டு நாட்டு’ என்று போட்டிக்கொண்டு நடிப்பில் ஆட்டம்போடுவதால் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு எண்ட் இல்லாமல் போய்விடுகிறது. கடவுள் போர்வையாளர்களால் உடமைகளாக மட்டுமே பார்க்கப்பட்ட தேவதாசியை காதலித்து, கரம்பிடித்து நம் இதயத்தில் ஷ்யாம் சிங்கா ராய்யாக நீங்கா இடம்பிடித்து விடுகிறார் நானி.
கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ’ஷ்யாம் சிங்கா ராய்’ தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் இயக்குநர் 34 வயதே ஆன ராகுல் சங்ரித்யனுக்கு இது மூன்றாவது படம். ஆனால், மூவாயிரம் ஆண்டுகளுக்குமேலாய் நம் சமூகத்தில் ஆக்டோபஸ் கரங்களாய் பரவிகிடக்கும் சாதிய, பெண்ணடிமைத்தனத்தினை முற்போக்கு வசனங்களாலேயே பிற்போக்காளர்களை புரட்டியெடுத்து விடுகிறார். குறிப்பாக, தேவதாசி முறை குறித்து சினிமாக்களில் மேலோட்டமாய் வந்திருந்தாலும் இந்தளவுக்கு வெளிப்படையாக ’அடித்து நொறுக்கி’ பேசும் வசனங்களுடனும் காட்சிகளுடனும் வந்ததில்லை. அதற்காகவே, இயக்குநர் ராகுல் சங்ரிதியானை பாராட்டித் தீர்க்கலாம்.
தனக்குள் துடித்துக்கொண்டிருக்கும் தவிப்புகள், ஏங்கிக்கொண்டிருக்கும் ஏக்கங்கள், உள்ளத்தில் பொதிந்துகிடக்கும் கலைத்திறமைகள் என ஏ டூ செட்டையும் குறையொன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு நிறைவாகவே வாரி வழங்கியிருக்கிறார் அழகு சிற்பமாக வரும் சாய் பல்லவி. மேடையில் பொம்மைபோல் ஆடும் சாய் பல்லவியைவிட ஆற்றங்கரையோரத்தில் தேவதையாக ஆடும் சாய்பல்லவிதான் இன்னும் ரசிக்க வைக்கிறார்.
“எந்த பொண்ணும் யாருக்கும் தாசி கிடையாது. தனக்கு தாசி வேணும்னு நினைச்சா அது கடவுளே கிடையாது. கடவுளோட போர்வையில இருக்கிறவங்க நடத்துற அயோக்கியத்தனம் இது. ஆத்மார்த்தத்தைவிட எந்த ஆகமும் பெரிசு கிடையாது” என்று தேவதாசி முறையை எதிர்க்கும் ஷ்யாம், ரோஸியான சாய் பல்லவியையும் மெளனம் கலைத்து கலகம் செய்ய வைக்கிறார். விளைவு, பலமுறை தேவதாசிகளை தங்களது உரிமைப்பொருள் போல பாலியல் வன்முறைக்கு அழைக்கும்போது, அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சாய்பல்லவி, ஆக்ரோஷமாய் எதிர்த்துப்போராட ஆரம்பிக்கிறார்; குரல் கொடுக்கிறார். அடிமைத்தனத்திலிருந்தவரை பொதுநலவாதியாக்கிவிடுகிறது.
சாய் பல்லவி இப்படியென்றால் மற்றொரு நாயகியான கீர்த்தி ஷெட்டியின் அறிமுக காட்சியே ஆண் - பெண் சமத்துத்துவ தீயைப் பற்றவைக்கிறது. அடுத்தடுத்து வரும் அதன் தொடர்ச்சியும் ரசிக்க வைக்கின்றன.
ஆரம்பக் காட்சியில் நானியால் அடி உதைபட்டு வானத்தில் யாரும் பறக்கவில்லை. மாறாக ’தண்ணி கீழதான் இருக்கு. தரையும் கீழதான இருக்கு? எந்த நீர்த்துளிமேல எந்த சாதின்னு எழுதிருக்கு? அவனும் இதே ஊர்லதான் பொறந்தான். இதே ஊர்லதான் வளர்ந்தான். இதே ஊர்லதான் மண்ணாவான். அந்த மண்ணுல விளைஞ்சதை திண்ணுதான் உன் பிள்ளைங்களும் வளருவாங்க’ போன்ற கேள்விகளால் சமூகத்தின் மனதில் அழுத்தமான வேராய் ஊடுறுவுகிறார். மேலும், ’சமுதாயத்தை மாத்துற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் இருக்கு. ’மனுஷன மனுஷனா பார்க்காத இடம் ஊரா இருந்தா என்ன? வீடா இருந்தா என்ன?’ போன்றக் கருத்துக்களால் எரிமலையாய் வெடிப்பவர் சாய்பல்லவியுடனான காதலிலும் இறுதிக்காட்சியிலும் பனிமலையாய் உருகி, பார்வையாளர்களையும் உருக்கி விடுகிறார்.
படத்தின் பலம் வசனம் என்றால் ’பக்க பலமாக’ இருப்பது ஒளிப்பதிவும் இசையும் பாடல் வரிகளும்தான். இனிமையான இரவு, காதல் பயணிக்கும் ஆறு, ஒளிர் வீசும் நிலா, நானி - சாய் பல்லவி காதல் இவற்றுடன் கேமராவையும் காதலிக்க வைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் சானு சான் வர்கீஸ். காட்சிப்படுத்திய விதம், பின்னணி இசையும் புரட்சி வசனங்களுக்கும் புரட்சிக் காதலுக்கும் புத்துயிர் கொடுக்கின்றன.
குறிப்பாக, பாடல் வரிகள் மெய்ச்சிலிர்க்க வைக்கின்றன. ’ஷயாம் சிங்கா ராய்’ பாடல் கேட்பவர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போரிட வைக்கிறது. ’தொடுவானந்தா’, ’ஜகதீஷ்வர தேவி’ பாடல்களும் ரிப்பீட் மோடில் நம் காதுகளில் ரீங்காரமிட்டுகொண்டே இருக்கின்றன. அனைத்து பாடல்களையும் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யாமலேயே தமிழில் எழுதி கவனம் ஈர்த்துள்ளார் பாடலாசிரியர் செளந்'தர'ராஜன்.
மொத்தத்தில் ’ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஃபினிஷிங் சரியில்லையேப்பா’ என்ற வடிவேலுவின் ஃபேமஸ் வசனத்துக்கு எதிராக இருக்கிறது ’ஷ்யாம் சிங்கா ராய்’. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ’ஸ்ஸ்ஸ்… ஹப்படா, கதை எதை நோக்கி போகுதுன்னே தெரியலையே. இப்பவே கண்ணை கட்டுதே’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் திடீரென்று ஷ்யாம் சிங்கா ராயின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் பிளிறிக்கொண்டு வருகின்றன. ஷ்யாமின் எண்ட்ரி காட்சியிலேயே அடக்குமுறையாளர்களுக்கு நோ- எண்ட்ரி போர்டு வைத்துவிடுகிறார்கள்.
மறுஜென்மம் உண்டா? சாதி, மத வேறுபாடுகளை ஒழிக்கப்போராடும் எழுத்தாளர் தன் பெயருக்கு பக்கத்தில் ராய் என சாதிப்பெயரை ஒட்டிக்கொண்டிருப்பது ஏன்? என பல்வேறு 'லாஜிக்’கான கேள்விகளை பலர் சமூக வலைதளங்கில் வைத்து ஒருபுறம் விவாதித்துக்கொண்டிருந்தாலும், அடக்குமுறைகளுக்கு எதிரான காட்சிகளால் ’மேஜிக்’காக்கி நம் இதயத்தில் சிங்க நடைபோட்டு சிகரத்தில் உட்கார்ந்துவிடுகிறார் ’ஷ்யாம் சிங்கா ராய்’.
- வினி சர்பனா