சினிமா

நடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல் அழைப்பு: போலீசில் புகார்

நடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல் அழைப்பு: போலீசில் புகார்

webteam

நடிகை ஸ்வேதா மேனனுக்கு மிரட்டல் போன் அழைப்புகள் வந்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழில், ’நான் அவன் இல்லை 2’, ’அரவான்’, ‘துணை முதல்வர்’ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் இருக்கிறார். இவரது போனுக்கு நேற்று சிலர் பேசினர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்தனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் போனில் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசி னார். அதில் பேசியவர்கள் ஸ்வேதாவை ஆபாசமாகத் திட்டினர். அதோடு, கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளனர். இதையடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசில் ஸ்வேதா மேனன் புகார் செய்தார்.

மலையாள நடிகர் சங்க (அம்மா) தலைவராக 17 வருடங்கள் பதவி வகித்த இன்னசென்ட், உடல்நலக்குறைவு காரணமாக தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து ’அம்மா’வுக்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. மோகன் லால் தலைவர் பதவி க்குப் போட்டியிருக்கிறார். மற்றப் பதவிகளுக்கு பலர் மனுதாக்கல் செய்து வருகிறனர். நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. 

இதுபற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, ’நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாகக் குழு உறுப்பி னர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா, ரம்யா உட்பட பல இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை’ என்றார். 

ஸ்வேதா மேனன் குழந்தை பெற்றபோது, அவரது நிஜ பிரசவக் காட்சி, ‘களிமண்‘ என்ற மலையாள படத்துக்காக படமாக்கப்பட்டது, பரபரப் பானது. 2013ம் ஆண்டு காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப், தனது இடுப்பை பிடித்து விழா மேடையில் ஏற்றினார் என ஸ்வேதா போலீசில் கொடுத்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.