சினிமா

"நாம் பணிபுரியும் தொழிலைப் பற்றி பழிப்பது சரியல்ல" - ஸ்ருதிஹாசன்

"நாம் பணிபுரியும் தொழிலைப் பற்றி பழிப்பது சரியல்ல" - ஸ்ருதிஹாசன்

webteam

பாலிவுட்டில் போதைப்பொருள் விவகாரம் பூதமாக கிளம்பி தினமும் ஒரு செய்தி வெளியாகிவருகிறது. நடிகை ரியா கைது செய்யப்பட்டார். பின்னர் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் உள்பட பலரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாலிவுட் படவுலகம் பற்றிய விவாதம் எழுந்துள்ளது. சிலர் பாலிவுட்டை சாக்கடை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதுபற்றிப் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், "நாம் பணிபுரியும் தொழிலைப் பற்றி பழிப்பது சரியல்ல" என்று தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் தந்தை கமல்ஹாசன் கூறிய கருத்தையும் ஸ்ருதிஹாசன் நினைவுகூர்ந்துள்ளார். " என் அப்பாவிடம் ஒருவர், சினிமாவில் மகளை நடிக்கவைப்பதில் கவலைப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியில் பல அடுக்குகள் உள்ளன. அவருக்குப் பதிலளித்த அப்பா, சினிமா பற்றி தெரிந்துதான் அனுப்பினேன். உங்கள் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைச் செய்துவைக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாத வீட்டுக்கு அவரை அனுப்பிவைக்கிறீர்கள். ஆனால் நானோ என் மகளை நான் வளர்ந்த வீட்டுக்குத்தான் அனுப்பிவைத்துள்ளேன். இது என் வீடு. அவளுடைய பயணத்தைப் புரிந்துகொள்ளவும், அங்கு வலிமையாக இருப்பதற்கும் நான் கற்றுக்கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார்" எனப் பகிர்ந்துள்ளார்.

மேலும் பேசியுள்ள ஸ்ருதிஹாசன், " நீங்கள் வேறு எந்த துறையில் யாரிடம் கேட்டாலும் அவர்கள் நல்லதாகவோ, கெட்டதாகவோ சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கும். ஆனால், நாம் செய்ய வேண்டியது அநீதிக்கு எதிராக போராட வேண்டியதுதான். எனக்கு உடன்படாத விஷயங்களை நான் ஒப்புக்கொள்வதில்லை என்பதை பெருமையாகச் சொல்வேன்" என்றும் கூறியுள்ளார்.