சினிமா

'தவறான முன்னுதாரணம், யஷ்!" - சிகரெட் காட்சியால் கே.ஜி.எஃப் 2 டீசருக்கு சிக்கல்

'தவறான முன்னுதாரணம், யஷ்!" - சிகரெட் காட்சியால் கே.ஜி.எஃப் 2 டீசருக்கு சிக்கல்

Sinekadhara

கே.ஜி.எஃப் 2 டீசரில் யஷ் கொடுத்த மாஸ் என்ட்ரி சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

ராக்கி பாய் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் யஷ். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 1-ன் வெற்றியைத் தொடர்ந்து பாகம் இரண்டு எடுக்கப்பட்டது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

யஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியானது. வெளியான சிலமணி நேரங்களிலேயே கோடிக்கணக்கில் பார்வைகள் கூடின. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த டீசரைப் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போதுவரை யூடிபில் 13 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும், கர்நாடகா சுகாதாரத் துறையின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.

எதிர்ப்பு என்றவுடன் டீசருக்கே... என்று நினைத்துவிட வேண்டாம். லாங் ஷாட்டில் தோன்றும் ராக்கி பாயின் என்ட்ரியில், ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ராட்சத துப்பாக்கியால் வாகனங்களை வரிசையாக சுட்டுத் தள்ளுவார். அதன்பிறகு, தகதகவென அனல்பறக்கும் துப்பாக்கியின் முனையில் வாயிலிருக்கும் சிகரெட்டை பற்றவைப்பார். இந்தக் காட்சி கர்நாடக சுகாதாரத் துறையின் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. எனவே, நடிகர் யஷிற்கு ஒரு நோட்டீஸை அனுப்பியிருக்கிறது.

அதில், ‘’இதுபோன்ற சீன்களில் சட்டப்படி ‘புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என்ற வாக்கியத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த டீசரிலோ அல்லது திரைப்பட போஸ்டரிலோ எச்சரிக்கை வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. இது சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. யஷ், உங்களுக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் இருக்கின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவது குறித்து யஷ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் விஜய் கிராகண்டூர் மற்றும் கர்நாடகா பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கும் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. இதனால், கே.ஜி.எஃப் 2 டீசருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.