சினிமா

”என்மீதான அவதூறு வழக்கில் விசாரணை கூடாது” - விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

”என்மீதான அவதூறு வழக்கில் விசாரணை கூடாது” - விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

webteam

தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடர அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2021 நவம்பர் மாதம் 2ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு மைசூர் செல்வதற்காக மகாகாந்தி என்பவர் பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் அவருக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது மகாகாந்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதன் மீது விளக்கமளிக்குமாறு விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல் உத்தரவிட்டது.

அதேவேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம், சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல எனவே இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. மேலும் விஜய் சேதுபதி மீது மகாகாந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தற்போது நடிகர் விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.