சினிமா

குறும்பட இயக்குநர், அவரது நண்பரை கடத்திவைத்து மிரட்டல்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்

குறும்பட இயக்குநர், அவரது நண்பரை கடத்திவைத்து மிரட்டல்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்

PT

குறும்படம் எடுப்பதற்காக பணம் வாங்கல் - கொடுக்கல் விவகாரத்தில், இரண்டு பேரை கடத்தியதாக ஏழு பேர் வளசரவாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பம்மலை சேர்ந்தவர் முகமது ஈசாக் (40). இவரது நண்பர் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த முன்வர் உசைன் (38). இவர்கள் இருவரும் சேர்ந்து குறும்படம் எடுப்பதற்காக, காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடமிருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.80 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. அதில் இதுவரை ரூ.30 லட்சம் மட்டும் முகமது ஈசாக் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால் பாக்கி உள்ள ரூ.50 லட்சம் பணத்தையும் திருப்பி தருமாறு, செல்வம் நெருக்கடி வந்ததாகக் கூறப்படும் நிலையில், பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்பதற்காக முகமது ஈசாக் மற்றும் அவரது நண்பர் முன்வர் உசைன் பேருந்து மூலம் காஞ்சிபுரம் நேற்று சென்றுள்ளனர்.

அப்போது கடன் கொடுத்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள், கால அவகாசம் கேட்க வந்த முகமது ஈசாக் மற்றும் முன்வர் உசைன் இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்று ஒரு வீட்டின் அறையில் அடைத்து தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பணத்தைக் கேட்டு மிரட்டியதுடன், அப்போது அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் பணத்தை மட்டும் பெற்று கொண்டு அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டநிலையில், புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர், கடன் கொடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (39), குட்டி என்ற சதீஷ் (44), வல்லரசு (24), உதயகுமார் (24), குமரன் (40), ருஜினீஸ்வரன் (41), தன்ராஜ் (36) ஆகிய ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட செல்வம் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுர மாவட்ட ஒன்றிய செயலாளர் என்று கூறப்படுகிறது.