ரஜினிகாந்த், அஜித், சிம்பு படங்களின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பீதியால் நிறுத்தப்பட்டுள்ளன.
மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதனால் பாதிக்கப்பட்ட இருவர் இறந்து போயுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திரையரங்குகள், மால்கள் என முக்கியமான அனைத்து பொது இடங்களையும் மூடுவது என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளன.
இந்நிலையில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிம்பு படங்களின் படப்பிடிப்புகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. மார்ச் 31 வரை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தத் திரைப்பட படப்பிடிப்பு நகரத்தில் நடைபெற்று வந்த ரஜினிகாந்தின் 'அண்ணாத்த', அஜித்தின் 'வலிமை' மற்றும் சிம்புவின் 'மாநாடு' ஆகிய படங்களின் படப்பிடிப்புக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், படப்பிடிப்பு எதிர்பாராத விதமாக தாமதமாகி இருப்பதால் இந்தக் குறிப்பிட்ட திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளும் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல தியேட்டர்கள் விரைவில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், திரைப்படங்களை விநியோகிப்பதில் மத்திய அரசு விதித்து வரும் 10% டி.டி.எஸ்-ஐ எதிர்த்து மார்ச் 27 முதல் திரைப்பட விநியோகத்தை நிறுத்த போவதாக தமிழக விநியோகஸ்தர் சங்கம் கூட்டமைப்பு முன்பே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.