சினிமா

"ஒரு தாயாக தாழ்மையுடன் கேட்கிறேன்..."- பிரைவசியை முன்வைத்து ஷில்பா ஷெட்டி வேதனை

"ஒரு தாயாக தாழ்மையுடன் கேட்கிறேன்..."- பிரைவசியை முன்வைத்து ஷில்பா ஷெட்டி வேதனை

நிவேதா ஜெகராஜா

ஆபாச படங்கள் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக தனது கணவர் கைது நடவடிக்கை, அதையொட்டிய சம்பவங்களை முன்வைத்து தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்துள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தன்னுடையை குடும்பத்தின் பிரைவசியை மதிக்குமாறு வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் சில நாட்கள் முன்பு பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். தற்போது 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியையும் போலீஸார் விசாரித்த நிலையில், அவரை சுற்றியும் நிறைய வந்ததிகள் உலா வந்தன. இதையடுத்து, சில ஊடக நிறுவனங்கள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்த ஷில்பா ஷெட்டி. தற்போது தனது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், ``கடந்த சில தினங்களாக எனக்கு அனைத்துப் பக்கங்களும் சவால் நிறைந்ததாக இருந்தது. நிறைய வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஊடகங்களாலும், ஏன்... எனது நலம் விரும்பிகளாலும்கூட தேவையற்ற, ஆதாரமற்ற தாக்குதல்கள் என்னை நோக்கி இருந்தன. ட்ரோலிங், கேலி, கிண்டல் என் மீது என்பதை தாண்டி எனது குடும்பத்தினரை நோக்கியும் இருந்தன. இப்போது என் நிலைப்பாடு, இந்த விஷயத்தில் எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்கப்போவதில்லை என்பதுவே.

வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் கருத்து தெரிவிப்பதும் முறையாக இருக்காது என்பதால் எதையும் நான் கூறப்போவதில்லை. எனவே தயவுசெய்து தவறான குற்றச்சாட்டுகள் சொல்வதை நிறுத்துங்கள். எப்போதும் நான் கடைபிடிக்கும் கொள்கை, `புகார் சொல்லக் கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது’ என்பதே. அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன். இப்போது நான் சொல்வது எல்லாம் ஒன்றுதான். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்பதுதான்.

ஒரு குடும்பமாக எங்கள் முன் இருக்கும் அனைத்து சட்டபூர்வ வழிகளையும் தற்போது முயற்சி செய்துவருகிறோம். என் குழந்தைகளுக்காக எங்கள் தனியுரிமையை மதிக்கும்படி, குறிப்பாக ஒரு தாய் என்ற முறையில் நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழந்தைகளின் நலன்களை கருத்தில்கொண்டு ஒரு தாய் என்ற முறையில் இதனை கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஒரு விஷயத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அரைகுறையாகத் தகவல் தெரிவிப்பதையும் கருத்து கூறுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய நாட்டின் பெருமைமிகு சட்டத்தை மதிக்கும் குடிமகன்களில் நானும் ஒருவர். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். எனவே, எனது குடும்பத்தின் மற்றும் என்னுடைய பிரைவசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை இதன்மூலம் பணிவோடு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஊடக விசாரணைக்கு தகுதியற்றவர்கள். சட்டத்தை அதன் கடமையைச் செய்ய விடுங்கள். சத்யமேவ் ஜெயதே! நன்றியுடன் ஷில்பா ஷெட்டி குந்த்ரா" என்று தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.