சினிமா

ஓடிடி திரைப் பார்வை: 'ஷேர்னி'... நினைவில் காடுள்ள பெண் புலி! - ஒரு 'த்ரில்' அனுபவம்

subramani

'நினைவில் காடுள்ள மிருகம்' என்பார்கள். நாம் தொடந்து வனத்தை அழித்துக்கொண்டே போனால் 'நினைவில் காடுள்ள மனிதன்' என எதிர்காலத்தில் நமக்கு நாமே சொல்லக் கூடும். பல்லுயிர் ஓம்புதல் என்பதின் ஆதார நிலையே வனப் பாதுகாப்புதான். வனப் பாதுகாப்பு என்பது மரம், செடி கொடிகளை மட்டும் பாதுகாப்பது அல்ல, அவற்றை வாழிடமாகக் கொண்டுள்ள வன உயிர்களையும் பாதுகாப்பதும் கூட. இப்படியான விஷயங்களை ஓர் உண்மைச் சம்பவத்துடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும் சினிமாதான் 'ஷேர்னி' (sherni). வித்யாபாலன், சரத் சக்ஸேனா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமா அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது.

'ஷேர்னி' என்ற சொல்லுக்கு 'பெண் புலி' என்று பொருள். மத்தியப் பிரதேசத்தின் ஒரு வனப்பகுதியில் பெண் புலியொன்று மனிதர்களை அடித்துவிட்டுப் போய்விடுகிறது. மனித வாடை கண்ட அந்தப் பெண் புலியை பத்திரமாக அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அனுப்பிவிடுவது எனும் முயற்சியில் இருக்கிறார் வனத்துறை அதிகாரியாக வரும் வித்யாபாலன். அரசியல் ஆதாயம், மக்களின் அறியாமை, அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றை எல்லாம் மீறி வித்யாபாலனால் என்ன செய்ய முடிந்தது? மனிதர்களை வேட்டையாடிய பெண் புலி உயிருடன் சிக்கியதா? - இதுதான் திரைக்கதை.

வனப் பாதுகாப்பு குறித்த பெருஞ்செய்தியொன்றை தாங்கி நிற்கும் இக்கதையில் சலிப்பூட்டும் பிரசார தொனி எங்குமே இல்லை. விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்கான துல்லிய திரைக்கதையினை எழுதி இருக்கிறார் இயக்குநர் அமித் மசூர்கர். அவரது 'நியூட்டன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுபோலவே இந்த சினிமாவும் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

வித்யாபாலனுக்கு உதவியாக வரும் விஜய் ராஸ் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். புலியைக் கண்டதும் என்ன செய்யவேண்டும் என மக்களுக்கு விளக்கும் காட்சியாகட்டும், அறமும் அறிவுமற்ற அதிகாரிகளின் செயல்களுக்கு ஆற்றும் எதிர்வினையாகட்டும் தனக்கான வாய்ப்பு வரும் இடங்களில் எல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் அவர்.

மனிதவாடை கண்ட புலியை கொல்ல ஒரு தரப்பும், உயிருடன் பிடிக்க இன்னொரு தரப்பும் வனத்துள் பயணிக்க விறுவிறு திரைக்கதை புலிப்பாய்ச்சல் காட்டுகிறது.

“நீங்கள் வனத்திற்குள் புலியைக் காண நூறு முறை சென்றால், அதில் ஒருமுறை நீங்கள் புலியைப் பார்ப்பீர்கள். ஆனால், புலியோ உங்களை 99 முறை பாத்திருக்கும்” என்ற வசனம் அருமை. வன விலங்குகளுடன் மனித சேர்ந்து வாழ முடியும் என்பதையும், புலிகள் மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் உயிரல்ல என்பதனையும் சொல்லும் ஆழமான வார்த்தைகள் அவை.

புலி அடித்து ஒருவர் இறந்தார் என்ற செய்தியை வாசிக்கும் போதெல்லாம் நாம் ஒன்றைக் கவனிக்கலாம். புலி, மனிதனை அடித்துக் கொல்லுமே தவிர 99 சதவிகிதம் மனித மாமிசத்தை உணவாக எடுத்துக் கொள்ளாது. புலியைக் கண்ட மனிதனின் தற்காப்பு முயற்சிகளுக்கு புலிகள் எதிர்வினையாற்றும்போது நடக்கும் விபத்துகளே அவை.

கனிமவளச் சுரண்டல், ஆதிகுடிகளின் அறியாமையினை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள், சம்பளம் வந்தா போதும் என பணி செய்யும் வனப் பாதுகாப்பு உயரதிகாரி என பொறுப்பற்ற சுற்றத்திற்கு இடையே வித்யாபாலனின் உணர்வும் பொறுப்பும் கூடிய இந்தப் பயணம் ஒரு பெண் புலியின் அழுத்தமான தடம்.

ஒளிப்பதிவாளர் ராகேஷ் ஹரிதாஸ் வனத்தை 360 டிகிரியில் நமக்கு சுற்றிக் காட்டுகிறார். சினிமாத்தனமில்லாத அவரது ஒளிப்பதிவுமுறை நம்மை மத்தியப் பிரதேச வனத்திற்குள் ட்ரக்கிங் அழைத்துச் செல்கிறது.

இறுதிக்காட்சியில் வித்யாபாலன் கண்டறியும் இரண்டு குட்டிப் புலிகள் அழகு. இக்காட்சியில் தோன்றும் கிராமத்துப் பெண் சொல்கிறார். “ரெண்டும் பசியாற கோழி குடுத்தேன்...”. தாயை இழந்த குழந்தைப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றன என்பது இதமான உணர்வனுபவத்தை நமக்குத் தருகிறது. குகை மறைவில் நின்று பரிசுத்த விழிகளால் மனிதர்களை வியந்து பார்க்கும் குட்டிப் புலிகள் க்யூட் சொல்ல வைக்கின்றன. அதேநேரம் அக்குழந்தைப் புலிகள் தாயை இழக்க மனிதர்களே காரணம் என்ற உண்மை நம்மை அடர்ந்த குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகிறது. இந்தியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் 'ஷேர்னி'.

இப்படியாக மனிதன் தொடர்ந்து வன உயிர்களையும் வனத்தையும் அழித்துக் கொண்டே போனால். நம் நினைவுகளில் மட்டுமே இனி வனமும் வன உயிர்களும் வாழும். நீரின்றி அமையாது உலகு. வனமின்றி அமையாது நீர். பல்லுயிர் ஓம்புதலே பண்பட்ட சமூகத்தின் நல்லடையாளம்.