கடந்த 2023-ம் ஆண்டு ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி முதலியோர் நடித்து வெளியான படம், ‘ஜவான்’. ரெட் சில்லிஸ் தயாரித்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் செப்.7-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிபடமாக வலம் வந்தது.
அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த ஷாருக்கானின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். முதல் நாளில் இருந்தே இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்தியாவில் மட்டும் 26 நாளில் ரூ.611 கோடி வசூலித்தது, உலகம் முழுவதும் ரூ.1100 கோடிக்கும் மேலான வசூலைத் தொட்டது. இதன் வசூலனாது ஒரு வாரத்திற்கு ரூ.389 கோடியாக கணக்கிடப்பட்டது.
உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த 2-வது இந்தி படமாக ஜவான் மாறி சாதனை படைத்தது. முதலிடத்தில் அமிர்கானின் ‘தங்கல்’ படம் இருக்கிறது.
இந்நிலையில் பிளாக்பஸ்டர் படமாக வலம்வந்த ஜவான் திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடவிருப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
தமிழில் ராஜாராணி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ, நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் முதலிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கவனிக்கும் படியான இயக்குநராக மாறினார். அதற்குபிறகு தன்னுடைய 5வது படத்திலேயே ஷாருக்கானை இயக்கிய அட்லீ ‘ஜவான்’ என்ற 1000 கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவாகியுள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் அட்லீ, “ஜப்பான்.. நீங்கள் தயாரா, நவம்பர் 29-ம் தேதியன்று ஜவான் பெரிய திரையில் வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார். அட்லீயின் இந்த அறிவிப்பு ஷாருக்கான் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.