ஷாருக்கான் - மணிரத்னம் web
சினிமா

“சொல்லப்போனால், நான் விருதுகளுக்கு பேராசைப்படுவேன்” - நெகிழ்ந்த ஷாருக்கான்!

Rishan Vengai

2023-ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட அகாடமி விருதுகளான ‘IIFA’விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. அவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘ஜவான்’ படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்தவிருதை இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து ஷாருக்கானுக்கு வழங்கினர்.

துவண்டு போன பாலிவுட்டை தூக்கி நிறுத்திய ஷாருக்கான்..

பாலிவுட் திரையுலகில் பாய்காட் என்ற பிரச்னை மேலோங்கியிருந்த நேரம் அது, அப்போது இந்தி சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு கூட வரவேற்பு இல்லாமல், அனைத்து படங்களும் தோல்வியையே தழுவினர். தெலுங்கு, தமிழ், கன்னட திரையுலகில் இருந்து சென்ற அனைத்து படங்களும் அங்கே வசூலை வாரி குவித்த நிலையில், இந்தி சினிமா அவ்வளவுதானா என்ற கேள்வியே எழும் நிலைமைக்கே சென்றுவிட்டது.

pathaan movie

'ஜீரோ' மற்றும் 'ஜப் ஹாரி மெட் செஜல்' போன்ற ஃபிளாப் திரைப்படங்களுடன் 4 வருடங்களாக தன்னுடைய கம்பேக்கிற்காக காத்துக்கொண்டிருந்த ஷாருக்கானுக்கு, பதான் திரைப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனையை குவித்த இந்த திரைப்படம் பாலிவுட் சினிமாவையே தூக்கி நிறுத்தியிருந்தாலும், அந்தப்படத்தில் ஷாருக்கானின் வெற்றிக்கு துணையாக சல்மான்கானின் கேமியோவும் தேவைப்பட்டது.

jawan

ஆனால் அதற்குபிறகு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கலக்கியிருந்த ஷாருக்கான், அனைத்து பக்கத்திலிருந்தும் தன்னுடைய பழைய க்ரேஸான ஆக்டிங் திறமையை வெளிப்படுத்தி சிறுசில் இருந்து பெருசுவரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். இப்படம் உலகளவில் மீண்டும் ஆயிரம் கோடி வசூல்செய்து சாதனைக்கு மேல் சாதனை படைத்தது. மீண்டுவந்த ஷாருக்கான அடுத்தடுத்த இரண்டு படங்களில் ஆயிரம் கோடி வசூலை குவித்த ஒரே நடிகர் என்ற இமாலய சாதனையை தன்வசப்படுத்தினார்.

மணிரத்னம் காலை தொட்டு வணங்கிய ஷாருக்கான்..

ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான 'IIFA' விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மணிரத்னம் மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து வழங்கினர். விருதை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த ஷாருக்கான், மணிரத்னத்தின் காலை தொட்டு வணங்கியதோடு, ஏஆர் ரஹ்மானையும் அரவணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

விருதைபெற்றுக்கொண்ட பிறகு பேசிய ஷாருக்கான், “எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத்திற்கும் , ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி. இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், நான் விருதுகளுக்கு பேராசைப்படுவேன். இந்த விருது எனக்கு மிகவும் பெர்சனல். என்னுடன் இந்த பிரிவுக்கு நாமினேட்டாகி இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கெளஷல், சன்னி தியோல் ஆகியோருக்கும் வாழ்த்துகள். அனைவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான்" என பேசியிருக்கிறார்.