சினிமா

‘கேஜிஎஃப் 2’ சாதனையை தவிடுபொடியாக்கிய 'பதான்' - ஒரேநாளில் கிங் என்று நிரூபித்த ஷாருக்கான்!

‘கேஜிஎஃப் 2’ சாதனையை தவிடுபொடியாக்கிய 'பதான்' - ஒரேநாளில் கிங் என்று நிரூபித்த ஷாருக்கான்!

சங்கீதா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘பதான்’ படம், விடுமுறை அல்லாத வார நாட்களில் வெளியாகியும், தென்னிந்திய நடிகர் யஷ்ஷின்‘கே.ஜி.எஃப். 2’ சாதனையை இந்தியில் முறியடித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘ஜீரோ’ படத்திற்குப் பிறகு அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’, மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ (இந்தி), ரன்பீர் கபூரின் ‘பிரம்மாஸ்திரா’ உள்ளிட்டப் படங்களில் கேமியோ ரோலில் மட்டுமே வந்த ஷாருக்கான், ‘பதான்’ படத்தில் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அதுவும் முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது ‘பதான்’.  இந்தப் படத்தின் ‘பேஷாரம் ரங்’ பாடல் சர்ச்சை மற்றும் பாய்காட் பாலிவுட் உள்ளிட்ட சிக்கல்களுக்கு இடையே இன்று குடியரசுத் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இந்தப் படம் வெளியானது.

இந்தி தவிர, தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் படம், எதிர்பார்த்ததைப் போல் உலக அளவில் ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் துவண்டு கிடந்த பாலிவுட்டை, ‘பதான்’ படம் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை பாலிவுட் தயாரிப்பாளர்களிடையே துளிர்த்துள்ளது.

மேலும், முன்பதிவு டிக்கெட்டுகளிலேயே 25 கோடி ரூபாய்க்கும் வசூலித்து மாஸ் காட்டிய ‘பதான்’ படம், இந்தியாவில் இந்தியில் (HINDI BELT) மட்டும் ஒரே நாளில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளியான யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் தான், இந்தி ஓபனிங் கலெக்ஷனில் 53.95 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ரூ.53.6 கோடியும், அதேவருடம் வெளியான ‘வார்’ திரைப்படம் ரூ.53.35 கோடியும் வசூலித்து இருந்தது. அதுவும் விடுமுறை நாட்களில் வெளியாகி இந்தப் படங்கள் எல்லாம் சாதித்த நிலையில், ‘பதான்’ படம் வாரநாட்களில் வெளியாகி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

இந்தி தவிர, மற்ற மொழிகளில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தியாவைத் தாண்டி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு டிக்கெட்டுகளிலேயே இந்தப் படம் வசூலை வாரிக்குவித்த நிலையில், படம் அங்கெல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் மட்டும் 71 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 35 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் சுமார் 106 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது.

பாலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருவதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் இந்தப் படம் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தனது ‘பதான்’ படத்தின் ஒரேநாள் வசூல் மூலம் பாலிவுட் கிங் என்று ஷாருக்கான் நிரூபித்துள்ளார்.