ஜாக்கி சான் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்களை சந்தித்த ஷாரூக் கான், அவர்களுடன் எடுத்த செல்ஃபியை, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரேபியாவை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொழுதுபோக்குத் துறையை மேம்படுத்துவதற்காக ஜாய் என்டர்டெயின்மென்ட் போரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், ரியாத்தில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்க, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நடிகர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் கலந்துகொண்டார். மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், பெல்ஜியம் நடிகர் ஜீன் கிளாட் வான்டேம், ’கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜேசன் மோமோ, பிரபல அமெரிக்க டிவி தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பொழுதுபோக்கு துறையில் அவர்களது பங்களிப்புக்காக விருதுகள் வழங்கப்பட்டன. விருதை பெற்ற ஜாக்கி சான், ‘எனது படத்தின் ஷூட்டிங்கை ரியாத்தில் மீண்டும் நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது படக்குழுவுடன் இங்கு வருவேன்’ என்றார்.
இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷாரூக் கான், தனது சமூக வலைத்தளத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். ’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று அதில் தெரிவித்துள்ளார். இதே போல ஜாக்கிசானும் தனது சமூக வலைத் தளத்தில் இந்தப் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.